×

கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கடல் அழகை ரசிக்கும் மையம் ₹6 கோடியே 79 லட்சம் செலவில் அமைகிறது

கன்னியாகுமரி, டிச. 11:     கன்னியாகுமரி கடற்கரையில் சுவதேஷ் தர்ஷன் திட்டத்தில் ₹6 கோடியே 79 லட்சம் செலவில் சுற்றுலாபயணிகள் கடல் அழகை ரசிக்கும் மையம் அமைக்கும்  பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள். இங்குவரும் சுற்றுலா பயணிகள் அதிகாலை சூரியன் உதிக்கும் காட்சியை திரிவேணி சங்கமத்தில் ரசிக்கின்றனர். முக்கடலும் சங்கமிக்கும் இடத்தில் குளித்து மகிழ்கின்றனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்கள். கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர்சிலை ஆகியவற்றை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு சேவை மூலம் பார்வையிடுகின்றனர். கடற்கரை சாலையில் உள்ள காந்திமண்டபம், காமராஜர் மணி மண்டபம், காட்சிகோபுரம் ஆகியவற்றை பார்வையிடுகின்றனர். மாலை நேரத்தில் சன்செட்பாயிண்ட் கடற்கரை பகுதியில் சூரியன் மறையும் காட்சியை பார்க்கின்றனர். மற்றும் கன்னியாகுமரியில் பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா ஆகியவற்றை பார்வையிடுகின்றனர்.

கன்னியாகுமரியில் ஆண்டிற்கு ஒரு கோடிக்கு மேல் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்குவரும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் மத்திய அரசு சுவதேஷ் தர்ஷன் திட்டத்தில் ₹9 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக சுற்றுலா திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி மூலம் இந்த திட்டத்தின் கீழ் 10 பணிகள் கன்னியாகுமரியில் நடந்து வருகிறது. இதில் கன்னியாகுமரி கடற்கரை சாலை பகுதியில் கடல் அழகை சுற்றுலாப்பயணிகள் பார்த்து ரசிக்க ₹6 கோடியே 79 லட்சம் ரூபாய் செலவில் கடற்கரையில் தடுப்புசுவர் கட்டப்படும் பணி நடந்து வருகிறது. இங்கு சுற்றுலா பயணிகள் அமர்ந்து கடல் அழகை பார்வையிட வசதியாக இருக்கைகள் அமைத்து கடல் அழகை ரசிக்கும் மையம் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.

Tags : beach ,Kanyakumari ,
× RELATED குமரி மாவட்டம் முள்ளூர்துறையில் ரூ.5...