×

சாலையை சீரமைக்க கோரி உடன்குடி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

உடன்குடி,டிச.11: உடன்குடி பேரூராட்சிக்குட்பட்ட சிவல்விளைபுதூரில் 7ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
உடன்குடி பேரூராட்சிக்குட்பட்ட சிவல்விளைபுதூரில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் உடன்குடி, திருச்செந்தூர் பகுதிக்கு வரும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலை சீரமைக்கப்பட்டு சுமார் 7ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. மேலும் தெருவிளக்குகளும் எரியாததால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவதோடு இரவில் வாகனஓட்டிகள், முதியவர்கள் கீழே விழுந்து விபத்தில் சிக்கும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதுகுறித்து கிராம மக்கள் சார்பில் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனையடுத்து இப்பகுதி மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து உடன்குடி பேருராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பேரூராட்சி செயல்அலுவலர் இல்லாததால் இளநிலை உதவியாளர் பரமசிவத்திடம் மனுஅளித்தனர். இதுகுறித்து பாஜ மாவட்ட தகவல்தொழில்நுட்பப்பிரிவு தலைவர் முத்துராஜன்தர்மலிங்கம், பேரூராட்சி செயல்அலுவலரிடம் செல்பேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது, ரூ40லட்சம் மதிப்பீட்டில் சாலைஅமைக்கும் பணிகள் ஒரு மாதத்திற்குள் தொடங்கப்படும் எனவும், தெருவிளக்குகள் எரிவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : Siege ,Ullankudi Parishad Office ,road ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...