கோயில் நிலத்தை மீட்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் தீர்த்தம் தெளித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, டிச.11: கோயிலுக்கு சொந்தமான நிலத்தினை மீட்க கோரி கயத்தாறு  ஓணமாக்குளம் பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் தீர்த்தம் தெளித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாரதிய கிசான் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் ரங்கநாயகலு தலைமையில் கயத்தாறு ஓணமாக்குளம் பகுதி மக்கள் கையில் தீர்த்த குடத்துடன் வந்து ராமநாமம் கூறி கலெக்டர் அலுவலகத்தில் தீர்த்தம் தெளித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: எங்கள் ஊரில் 200 ஆண்டுகள் பழமையான வரதராஜபெருமாள் கோயில் உள்ளது. இந்த  கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை கடைசி சனிக்கிழமை, புரட்டாசி 3ம் சனிக்கிழமை கருடசேவை நடத்தப்படும். மார்கழி மாதம் திருப்பாவை சேவிக்கப்படும். ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். கோயிலுக்கு அருகில் வடபுறத்தில் தீர்த்தகிணறு மற்றும் நந்தவனம் இருந்தது. ஆனால் அரசு அதிகாரிகள் அருகில் உள்ள தொடக்கப்பள்ளியை காரணம் காட்டி கோயில் இடத்தை அரசு புறம்போக்காக ஆக்கிரமித்து விட்டார்கள். எனவே கோயிலுக்கு சொந்தமான இடத்தை கோயில் உற்சவ விழா நடத்துவதற்கு அரசு கைப்பற்றிய நிலத்தை திரும்ப தர வேண்டுகிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் பரமேஸ்வரன், நிர்வாகிகள் சீனிவாசன், வரதராஜன், ரகுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: