×

நாங்குநேரி குளங்களுக்கு தண்ணீர் கேட்டு நெற்பயிரோடு வந்த விவசாயிகள்

நெல்லை, டிச. 11: கருகும் நெற்பயிரை காப்பாற்றக் கோரி நாங்குநேரி தாலுகா விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு நெற்பயிருடன் வந்து மனு கொடுத்தனர். நாங்குநேரி அருகே சவளைக்காரன்குளம், இலங்குளம் விவசாயிகள் கலெக்டரிடம் அளித்த மனு: கடந்த சில நாட்களாக மழையால் குளங்களில் தண்ணீர் இருந்தது. அதை நம்பி நாங்கள் வயல்களில் நெல் நடவு செய்தோம். தற்போது மழையில்லாததால் தண்ணீரின்றி குளங்கள் காணப்படுகின்றன. இதனால் நெற்பயிர்களை காப்பாற்ற முடியவில்லை. எனவே களக்காடு பச்சையாற்று அணைக்கட்டில் இருந்து இலங்குளம், நெடுங்குளம், சடையநேரி, சவளைக்காரன்குளம் உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

 நாங்குநேரி தாலுகா கூந்தன்குளம் ஆதிதிராவிட நலச்சங்கத்தினர் ஜான்சன் தங்கராஜ் தலைமையில் கலெக்டரிடம் அளித்த மனுவில் ‘‘கூந்தன்குளம் பகுதியில் ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டா நிலங்களில் இப்போது போலியாக பட்டா போட்டு வருகின்றனர். மேலும் வருவாய்த்துறையினர் போலி பட்டா வழங்குவதற்கு துணை போகின்றனர். இப்பகுதியில் உள்ள புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து தேநீர் கடைகளும், ஓட்டல்களும் வைக்கப்பட்டு வருகின்றன. எனவே ஆதிதிராவிட மக்களுக்கு உரிய சலுகைகள் மற்றும் பலன்கள் கிடைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags : paddy fields ,Nanguneri ,
× RELATED நெல்லையில் டிரோன்கள் பறக்கத் தடை