வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை 16 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிவு அதிகாரிகள் தகவல்

வேலூர், டிச.10: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் வேலூர் உட்பட 16 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் கடும் சரிவை கண்டுள்ளது. இதனால் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறித்து, மாநில நில மற்றும் நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் ஒவ்வொரு மாதமும் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 3,280 பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் 1,559 ஆழ்துளை கிணறுகள் மூலம் நிலத்தடி நீர்மட்டம் குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த மாதம் நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த 2017 நவம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் தமிழகத்தில் கோவை, தஞ்சாவூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உட்பட 15 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவாரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், திருவள்ளூர், திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், நீலகிரி, திண்டுக்கல் ஆகிய 16 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. இதுகுறித்து நில மற்றும் நீர்வள ஆதாரப்பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலதாமதம் தொடங்கியது. இதனால் இந்த ஆண்டு தமிழகத்தில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. கஜா புயலால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. ஆனால் கடந்த ஆண்டு ஒப்பிடுகையில் இந்தாண்டு 16 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ளது. வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெறுவதால் வரும் நாட்களில் மழை பெய்ததால் மட்டுமே ேகாடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஓரளவு மட்டுமே குறைக்க முடியும்’ என்றனர்.

Related Stories: