தமிழகத்தில் இயங்கி வரும் பிளாஸ்டிக் கேரி பேக் கம்பெனிகளுக்கு தடை விதித்து நோட்டீஸ் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை

வேலூர், டிச.11: தமிழகத்தில் இயங்கி வரும் பிளாஸ்டிக் கேரி பேக் கம்பெனிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மனித பயன்பாட்டில் பிளாஸ்டிக் என்பது நீக்கமற நிறைந்து இருந்தது. இதனால் பிளாஸ்டிக்கிற்கு பெரும் வரவேற்பு இருந்தது. நாளடைவில் இந்த பிளாஸ்டிக்கினால் விலங்குகள் தொடங்கி மனித உயிர்களை பறிக்கும் பேராபத்து நிறைந்திருப்பது உணரப்பட்டது. பிளாஸ்டிக் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் பாதிப்புடன், மண் வளமும், நிலத்தடி நீராதாரமும் பாதிக்கப்பட்டது. கால்வாய்களில் வீசப்படும் பிளாஸ்டிக்கினால் அடைப்பு ஏற்பட்டு மழை வெள்ளம், கால்வாய் கழிவுகள் சாலைகளில் ஓடுவதும், பிளாஸ்டிக் கேரி பேக்குகள் மீது தேங்கும் மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பாதிப்பு ஏற்படுவது என்று மனிதனுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகவும் மாறியது.

இதனால் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராக உலகளாவிய எதிர்ப்பு உருவாகி வருகிறது. தமிழகத்திலும் மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பது என்று அரசு முடிவு செய்து வரும் ஜனவரி 1ம் தேதியில் இருந்து பிளாஸ்டிக் தடை என்று அறிவித்தது. இதையடுத்து அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் என்று பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் தயாரிக்கும் கம்பெனிகள் உற்பத்தியை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பிளாஸ்டிக் கேரி பேக்குகள், பிளாஸ்டிக் தட்டு, டம்ளர் உட்பட ஒரு முறை பயன்படுத்தக்கூடிய அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியை நிறுத்த வேண்டும். தமிழகத்தில் பிளாஸ்டிக் தயாரிக்கப்படும் அனைத்து கம்பெனிகளுக்கும் தடை விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

Related Stories: