அதிகளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தண்டனை கைதி தற்கொலை முயற்சி வேலூர் மத்திய சிறையில் பரபரப்பு

வேலூர், டிச.11: வேலூர் மத்திய சிறையில் தண்டனை கைதி அதிகளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி(49). இவர் பெண்களிடம் கத்தியை காட்டி வழிப்பறி, செயின்பறிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த வழக்குகளில் அவருக்கு கடந்த 2012ம் ஆண்டு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வழக்கம்போல் அனைத்து கைதிகளும் தூங்கினர். அப்போது சின்னச்சாமி திடீரென தூக்க மாத்திரைகளை எடுத்து அதிகளவில் சாப்பிட்டுள்ளார். இதனால் மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற கைதிகள் கூச்சலிட்டுள்ளனர்.

இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சற்று மனநோயாளி போல் இருந்துள்ளார். இதனால் அவர் அதிகளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளதாக சிறைக்காவலர்கள் தெரிவித்தனர். இருப்பினும் அளவுக்கு அதிகமாக அவரிடம் தூக்கமாத்திரை எப்படி வந்தது என்பது குறித்து பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வேலூர் மத்திய சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: