×

கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி அதிகளவு மாத்திரை சாப்பிட்டு வந்த கர்ப்பிணி மயங்கி விழுந்தார் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

திருவண்ணாமலை, டிச.11: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்வு கூட்டத்தில், கணவருடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்க வந்த மாத்திரை சாப்பிட்டு வந்த கர்ப்பிணி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்நிலையில், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த இளம்பெண் ஒருவர் மனுக்கள் பதிவு செய்யும் பெண்கள் வரிசையில் காத்திருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் மற்றும் போலீசார் உடனடியாக ஓடிவந்து இளம்பெண்ணை மீட்டு மீட்டு தண்ணீர் கொடுத்தனர். அப்போதும் அவர் லேசான மயக்க நிலையிலேயே இருந்தார்.
இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரித்தபோது, திருவண்ணாமலை அரசமரத்தெருவை சேர்ந்த ராமன் என்பவரின் மனைவி சித்ரா(30) என்பதும், தனது கணவருடன் சேர்ந்து வாழ அவரது உறவினர் இடையூராக இருந்து வருவதால், மனவேதனையில் வரும்போதே அதிகளவு தைராய்டு மாத்திரைகள் சாப்பிட்டுவிட்டு வந்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து அவரை உடனடியாக மீட்டு ஆட்டோவில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து இளம்பெண் கலெக்டரிடம் அளிக்க வைத்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது முதல் கணவர் இறந்துவிட்டதால், அதன்பிறகு பேஸ்புக் மூலம் அறிமுகமான ராம் என்பரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன். இவர் என்னைவிட 3 வயது சிறியவர். திருமணத்திற்கு பிறகு இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக எனது மாமியார் வீட்டில் என்னை வேண்டாம் என்கின்றார்கள். எனது கனவரை என்னுடன் வாழ விடாமல் செய்து வருகின்றார்கள். எனது வீட்டிலும் என்னை சேர்க்கவில்லை. தற்போது நான் இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளேன். கருவில் இருக்கும் சிசுவை கலைக்க சொல்லி வருகிறார்கள். எனவே என்னை காப்பாற்றி எனது கணவருடன் சேர்ந்து வாழ வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இளம்பெண் வைத்திருந்த மனுவினை போலீசார் பெற்று சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் உமாமகேஸ்வரியிடம் வழங்கினர். இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மனு அளிக்க வரிசையில் காத்திருந்த இளம்பெண் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...