பூலாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரம் ஏக்கர் பரப்பில் செங்கரும்பு சாகுபடி

இடைப்பாடி, டிச.7: பொங்கல் பண்டிகையையொட்டி, பூலாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில், ஆயிரம் ஏக்கர் பரப்பில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டு, தண்ணீர் பாய்ச்சும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டம், இடைப்பாடி, பூலாம்பட்டி, கூடக்கல், முலப்பாறை, நெடுங்குளம், கோனேரிப்பட்டி, பூமணியூர், காசிக்காடு, பில்லுக்குறிச்சி, கல்வடங்கம், காவேரிப்பட்டி, வெள்ளாள பாளையம், அண்ணமார்கோயில், அம்மாபாளையம், தேவூர், குள்ளம்பட்டி, மூலப்பாதை, கொங்கணாபுரம், கோனசமுத்திரம், சடையம்பாளையம், எருமப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளில் ஆயிரம் ஏக்கர் பரப்பில் பொங்கலை முன்னிட்டு, விவசாயிகள் செங்கரும்பை பயிரிட்டுள்ளனர். கடந்த 4 மாதத்திற்கு முன் பயிரிட்ட செங்கரும்பு தற்போது நல்ல விளைச்சலை கண்டுள்ளது. இதனால் கரும்பில், சோவை பிரிப்பது, தண்ணீர் பாய்ச்சுவது உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் இருப்பதால், வெளி மாவட்ட வியாபாரிகள், உள்ளூர் வியாபாரிகள் தற்போதே இடைப்பாடி மற்றும் பூலாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கரும்பு தோட்ட உரிமையாளர்களிடம், விலை பேசியும், குத்தகைதாரர்கள் பலர் முகாமிட்டு கரும்புகளை விற்பனைக்கு எடுத்து வருகின்றனர். ஒரு கரும்பு ₹10 முதல் 20 வரை என சுமார் 1 லட்சம் செங்கரும்புகளை அறுவடைக்கு பின் வியாபாரிகள் விற்பனைக்கு வாங்கி செல்ல தற்போதே முன் பணம் கொடுத்து செல்கின்றனர். இதனால் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு கரும்பின் விற்பனை அதிகரிக்கும் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்து வயல்களில் கரும்பு சோவை பிரிப்பது மற்றும் தண்ணீர் பாய்ச்சும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: