2 மாதங்களுக்கு பின் முட்டல் நீர்வீழ்ச்சியில் குளிக்க மீண்டும் அனுமதி

ஆத்தூர், டிச.7: மழையால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட முட்டல் ஏரி நீர்வீழ்ச்சியில், 2 மாதங்களுக்கு பின் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆத்தூர் அருகே முட்டல் கிராமத்தையொட்டி கல்வராயன் மலை தொடரில், முட்டல் ஏரி மற்றும் நீர்வீழ்ச்சி உள்ளது. இதை வனத்துறையினர் சுற்றுலா தலமாக பராமரித்து வருகின்றனர். படகு சவாரி மற்றும் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்கும் வசதி, வனப்பகுதியில் பொழுதுபோக்கும் வகையில் குடில், பூங்கா மற்றும் சிறுவர்கள் விளையாட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.  விடுமுறை நாட்களில் ஆத்தூர் மற்றும் விழுப்புரம், சேலம், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் பெய்த மழையால், நீர்வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி முட்டல் ஏரியை வனத்துறையினர் மூடினர். மேலும், நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.  

இதனால், முட்டல் பகுதிக்கு கடந்த 2 மாதமாக சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்தது. இந்நிலையில், தற்போது மழை பெய்யாததை கருத்தில் கொண்டு, நாளை (8ம் தேதி) முதல் முட்டல் ஏரி மற்றும் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்கலாம் என வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட வன அலுவலர் பெரியசாமி பிறப்பித்துள்ளார் என ஆத்தூர் வனச்சரகர் அன்பழகன் தெரிவித்தார்.

Related Stories: