×

மாவட்டத்தில் திடீர் மழை விவசாயிகள் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரி, டிச.7: கிருஷ்ணகிரியில் நேற்று திடீரென பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், போதிய மழை பெய்யாத நிலையில், கடும் வெயில் வாட்டியெடுத்து வந்தது. கஜா புயலின்போது, ஓரிரு தினங்கள் தூறல் மட்டுமே பெய்தது. காலை வேளையில் பனிமூட்டமாகவும், நண்பகல் வேளையில் வெயில் சுட்டெரிப்பதுமாக இருந்து வந்தது. இதனால், மக்கள் தவித்து வந்தனர். மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியில், நேற்று காலை முதலே வழக்கம்போல் வெயில் கொளுத்தியது. பிற்பகல் வானில் கருமேகங்கள் திரண்டது. திடீரென 2.45 மணியளவில் மழை பெய்தது. 3.15 மணி வரை சுமார் அரை மணி நேரம் மழை நீடித்தது. இதனால், சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பெங்களூரு சாலையில் போதிய கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், சாலையிலேயே மழை நீருடன், கழிவுநீரும் சேர்ந்து ஓடியது. இந்த மழையால் நடைபாதையில் கடை வைத்திருந்தவர்கள், கடைகளை மூடி விட்டு ஓட்டம் பிடித்தனர். இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் தொப்பலாக நனைந்தனர். மழை ஓய்ந்தாலும், சாக்கடை கால்வாய் அடைப்பால் வழிந்தோட வழியின்றி, கழிவுநீருடன் சாலையில் தேங்கியவாறு கிடந்ததால் பள்ளி மற்றும் கல்லூரி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் செய்வதறியாது தவித்தனர். திடீர் மழையால் குளிர்ந்த காற்று வீசியது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.இதேபோல், மாவட்டத்தில பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

Tags : Rainfall farmers ,district ,
× RELATED மலை மாவட்ட சிறு விவசாய சங்கத்தினர்...