×

அருப்புக்கோட்டை நகரில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெருக்கடி காவல்துறை பரிந்துரைத்தும் அகற்றாத நகராட்சி

அருப்புக்கோட்டை டிச.7: அருப்புக்கோட்டையில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாகவும், உடனே அகற்ற வேண்டும் என்வும் காவல்துறை பரிந்துரைத்தும் நகராட்சி கண்டுகொள்ளவில்லை. அருப்புக்கோட்டை நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி கொண்டே வருகிறது.  இதனால் பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பெரிதும் அவதிப்படுகின்றனர்.  இந்நிலையில் நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு அருப்புக்கோட்டை டவுண் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கடந்த செப்டம்பர் 4ம் தேதி பரிந்துரை கடிதம் அனுப்பினார்.  அதில், ‘‘அருப்புக்கோட்டை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துவிட்டன.  மேலும் நடைபாதைகளிலும், சாலை ஓரங்களிலும் தற்காலிகமாக கடைகள் அமைப்பதால் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துகின்றது.  

எனவே அருப்புக்கோட்டையில் உள்ள முக்கிய  சாலைகளான புதிய பேருந்து நிலையம், நாடார் சிவன்கோவில் பகுதி, முருகன் கோவில் சந்திப்பு, பாம்பே மெடிக்கல் பகுதி, சத்தியமூர்த்தி பஜார், அகமுடையார் மஹால் சந்திப்பு, திருச்சுழி ரோடு, எம்.எஸ் கார்னர் ஆகிய பகுதிகளில் சாலையின் இருபுறங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாவண்ணம் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என தெரிவித்திருந்தார். நகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும் கண்டுகொள்ளாததால்  தொடர் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே டவுண் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் போலீசார் உதவியுடன் அகமுடையார் மஹாலில் இருந்து அண்ணாசிலை, மதுரை ரோடு, புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள நடைபாதை கடைகளை அப்புறப்படுத்தினார்.  மேலும் கடைக்காரர்கள் தங்கள் கடைகளின் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும் என வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினார்.  இதுகுறித்து போலீசார் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.  மேலும் ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறு செய்பவர்கள் மீது  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

 இந்நிலையில்  மீண்டும் நேற்று நகரில் சாலையின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளார்.  நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம்  நகரில் பாரபட்சம் இல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : municipality ,traffic crisis ,city ,Aruppukkottai ,
× RELATED சொத்துவரி செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை