×

ஆண்டிபட்டி பகுதியில் விளைந்து வெளிநாடு ஏற்றுமதியாகும் வெண்டைக்காய்

ஆண்டிபட்டி, டிச.7:  ஆண்டிபட்டி பகுதியில் விளையும் வெண்டைக்காய் வெளிநாடுகளுக்கு விமானத்தில் பறந்தாலும் உரிய விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டத்தில், ஆண்டிபட்டி விவசாயம் நிறைந்த பகுதியாகும். இப்பகுதியில் புள்ளிமான்கோம்பை, தர்மத்துபட்டி, டி.அனைக்கரைபட்டி, குன்னூர், அமைச்சியாபுரம், கரட்டுபட்டி, ஜி.உசிலம்பட்டி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் 400க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களில் சாம்ரெட் இனத்தைச் சேர்ந்த வெண்டிச் செடியை சாகுபடி செய்துள்ளனர்.

 இந்த செடி நடவு செய்த 40 நாட்களில் பயன்தரக்கூடிய செடியாகும். அறுவடை செய்த வெண்டைக்காய்களை ஆண்டிபட்டி, தேனி, வத்தலக்குண்டு, மதுரை உள்ளிட்ட நகரங்களில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்வார்கள். கடந்த ஆண்டுபோல் இந்தாண்டும் வெண்டையின் விலையில் ஏற்றமில்லை. இதனால் இப்பகுதியில் விளையும் வெண்டைக்காய்கள் மலேசியா, சிங்கப்பூர், செளதிஅரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு விளைந்த வெண்டைக்காய்கள் வெளிநாடு பறந்து சென்றாலும் உரிய விலை இல்லையே என்ற ஏக்கத்தில் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இது குறித்து விவசாயி மணி கூறுகையில், கடந்த ஆண்டு இதே மாதத்தில் வெண்டையின் விலை கிலோவிற்கு ரூ.40க்கு மேல் விற்பனையானது. ஆனால் தற்போது விலை கிலோ ஒன்றுக்கு ரூ.15 முதல் 20 வரை தான் விற்பனையாகிறது.  முதல் ரக வெண்டைக்காய்களை பெட்டிகளில் அடைத்து வெளிநாடுகளுக்கு வியாபாரிகள் வாங்கிச் சென்றாலும் உரிய விலை இல்லாததால் கை நஷ்டம் ஏற்படுகிறது என்றார்.

Tags : area ,Andipatti ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...