×

கம்பம் டூ சென்னைக்கு ஓட்டை, உடைசலான அரசு விரைவு பஸ்கள் பயணிகள் கடும் அவஸ்தை

கம்பம், டிச. 7: கம்பத்தில் இருந்து சென்னை செல்லும் அரசு விரைவு பஸ் போதிய பாராமரிப்புகள் இல்லாமல் மோசமான நிலையில் இருப்பதால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.   தேனி மாவட்டம், கம்பத்தில் இருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு சுமார் 7 அரசு விரைவு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் ஏராளமான தனியார் ஆம்னி பஸ்களும் சென்று வருகிறது. வசதி படைத்தவர்கள் அதிக தொகை கொடுத்து ஆம்னி பஸ்களில் செல்கின்றனர். நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் அரசு விரைவு பஸ்களையே நம்பி உள்ளனர்.

இந்நிலையில் கம்பத்தில் இருந்து சென்னை செல்லும் பெரும்பாலான பஸ்கள் போதிய அளவு பராமரிப்பு இல்லாததால் மேற்கூரை சேதமடைந்த நிலையிலும், பக்கவாட்டில் கண்ணாடிகள் இல்லாமலும் உள்ளது. இதனால் மழை காலங்களில் மழை நீர் உள்ளே புகுந்து விடுகிறது. இதனால் பயணிகள் இரவு நேரங்களில் உடல் முழுவதும் நனைந்த நிலையில் தூக்கமின்றி பயணிக்க முடியாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் பஸ் கண்டக்டருக்கும், பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.

  இது குறித்து பயணிகள் கூறுகையில், “நீண்ட தூரம் செல்லும் பெரும்பாலான அரசு விரைவு பஸ்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பயணிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. கை குழந்தையுடன் செல்லும் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் மழை காலங்களில் மழை நீர் பஸ்சின் மேற்கூரை வழியாக ஒழுகுகிறது. மேலும் ஜன்னல்களில் கண்ணாடி இல்லாமல் அட்டையை வைத்து மறைத்துள்ளதாலும் மழைநீர் உள்ளே வருகிறது. இதனால் பயணிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறோம். அரசு அவ்வப்போது புதிது புதிதாக பஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தாலும் இரவு நேரங்களில் தொலை தூரம் செல்லும் அரசு விரைவு பஸ்களை முறையாக பராமரித்து பயணிகளை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றனர்.

 இது குறித்து பஸ் கண்டக்டர் ஒருவர் கூறுகையில், “பயணிகள் எவ்விதமான சிரமங்களும் இல்லாமல் கொண்டு செல்வது எங்கள் கடமையாகும். பஸ் பழுது சம்பந்தமாக மேலதிகாரிகளிடம் கூறினால் நீ டிக்கெட் போடும் வேலையை மட்டும் பார் என்று மிகவும் தரக்குறைவாக பேசுகின்றனர்.” என்றார்.
க்ரைம் செய்திகள்...

கொலை  மிரட்டல்: ஒருவர் கைது
போடி அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் முத்துச்சாமி(52). கூலி வேலை செய்து வருகிறார். மீனாட்சிபுரம் சுருளி தெருவை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் இருவருக்குள் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று மாலை முத்துசாமி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். எதிரே வந்த முத்துராமலிங்கம் ஆபாசமாக பேசி, உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கியபின் கொலை மிரட்டலும் விடுத்தார்.
இதுகுறித்து முத்துச்சாமி போடி புறநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். எஸ்.ஐ மாயன் வழக்கு பதிவு செய்து காயமடைந்த முத்துசாமியை போடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றார்.

மதுபாட்டில் கடத்திய முதியவர் கைது
போடி தாலுகாக காவல் நிலைய எஸ்.ஐ முருகன் போடி அருகே உள்ள சிலமலை மணியம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு முதியவர் ஒரு பையினை எடுத்து கொண்டு சந்தேகப்படும் படியாக வந்தார். அவரை தடுத்து சோதனை செய்தபோது டாஸ்மாக் மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பதற்காக கடத்தி வந்தது தெரியவந்தது. உடனடியாக அவரிடமிருந்த 10 பாட்டில்களை பறிமுதல் செய்து கைது செய்து விசாரித்மதில் மணியம்பட்டியை சேர்ந்த ராயப்பன்(73) என தெரிந்தது. போடி நகரம் மற்றும் ஒன்றிய கிராமங்களில் தொடர்ந்து மதுபாட்டில்கள் மொத்தமாக வாங்கி குடிமகன்களுக்கு அதிக விலைக்கு விற்கும் பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது.

மகனை தாக்கிய தந்தை கைது
தேவதானப்பட்டியில் குடும்ப பிரச்சினையில் மகனை தாக்கிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.  தேவதானப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முத்தையா(50). நேற்று முன்தினம் இரவு வீட்டில் முத்தையாவிற்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆத்திரமடைந்த முத்தையா கட்டையால் தனது மகன் சந்தனகுமாரை(14) தாக்கியுள்ளார்.  இதில் தலையில் பலத்த காயமடைந்த சந்தனகுமார் சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முத்தையாவின் மனைவி பேச்சியம்மாள் கொடுத்த புகாரில் தேவதானப்பட்டி போலீசார் முத்தையாவை கைது செய்தனர்.

Tags : Chennai ,buses passenger ,
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...