விடிய விடிய நடந்த தர்ணாவை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர்கள் இன்று உண்ணாவிரத போராட்டம்

மதுரை, டிச. 7: 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று முன்தினம் மாலை தொடங்கிய தர்ணா போராட்டம் நேற்று காலை வரை விடிய விடிய நடந்தது. இதனைத்தொடர்ந்து, இன்று சிறுவிடுப்பு எடுத்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். விஏஓக்களுக்கு கணினி மற்றும் இணையதள வசதி செய்து தர வேண்டும். பட்டா மாறுதலுக்கு விஏஓ பரிந்துரையை கட்டாயமாக்க வேண்டும். கூடுதல் பொறுப்பு வகிக்கும் போது, பொறுப்பு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.

இதனால் கடந்த மாதம் 28ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் வழங்கும் சாதி, வருமானம், இருப்பிடச்சான்று, பட்டா மாறுதல் என ஆன்லைன் மூலம் செய்யும் பணியை கிராம நிர்வாக அலுவலர்கள் புறக்கணித்தனர். இந்த பணி புறக்கணிப்பு போராட்டம் நேற்று 9வது நாளாக நட்டித்தது.

இந்நிலையில் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தை தீவிரப்படுத்திய கிராம நிர்வாக அலுவலர்கள், நேற்று முன்தினம் தாலுகா அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் விடிய, விடிய நடந்து, நேற்று காலை 6 மணிக்கு முடிந்தது.

தொடர்ந்து இன்று ஒட்டுமொத்தமாக கிராம நிர்வாக அலுவலர்கள் சிறுவிடுப்பு எடுத்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மதுரை மாவட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் அண்ணாநகர் அம்பிகா திரையரங்கும் அருகே நடைபெறுகிறது. போராட்டம் தொடர்பாக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்து தீர்வு காணவில்லை என்றால் வரும் 10ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

Related Stories: