×

அதிமுக எம்.எல்.ஏ. வீடு முற்றுகை

திருப்பரங்குன்றம், டிச. 7: மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா வீட்டை தொகுதி மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா வீடு பசுமலையில் உள்ளது. வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முல்லைநகர், ராஜீவ்காந்தி நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் வசித்து வரும் இவர்களை பொதுப்பணித் துறையினர் திடீரென காலி செய்யச் சொல்வதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து முறையிட ராஜன் செல்லப்பாவை சந்திக்க பலமுறை முயன்றும், அவரை சந்திக்க முடியவில்லை. இதையடுத்து ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்டோர் நேற்று காலை பசுமலையில் உள்ள எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா வீட்டின் முன்பு சாலையில் அமர்ந்தனர். அப்போது அங்கிருந்த எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள், எம்.எல்.ஏ. வீட்டில் இல்லை எனக்கூறி அங்கிருந்து கிளம்பிச் செல்லுமாறு கூறினர்.

பொதுமக்கள் கூறுகையில், ‘பலமுறை எம்எல்ஏவை சந்திக்க முயற்சி செய்தோம். ஆனால் எம்.எல்.ஏ. எங்களை சந்திக்கவில்லை. எனவே எம்எல்ஏவை சந்தித்து விட்டுத்தான் இங்கிருந்து செல்வோம் எனக் கூறி முற்றுகையை கைவிட மறுத்து அங்கேயே அமர்ந்தனர். தகவலறிந்த எம்.எல்.ஏ. சிறிது நேரத்தில் வந்து பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்று தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து முற்றுகையை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : House ,AIADMK ,siege ,
× RELATED ஏட்டு வீட்டில் திருடிய 2 பேரை காவலில் எடுத்து விசாரணை