811க்கு பதில் 720 மி.மீட்டர் மட்டுமே மழை மதுரை மாவட்டத்தில் நவம்பர் வரை

மதுரை, டிச. 7: இந்தாண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை மதுரை மாவட்டத்தில் மொத்தம் 811.34 மி.மீட்டர் மழை பெய்ய வேண்டும் ஆனால் 720.91 மி.மீட்டர் மழைமட்டும் பெய்துள்ளது. இது நமக்கு பெய்ய வேண்டிய அளவை விட 90.43 மி.மீட்டர் மழை குறைவாக பெய்துள்ளது. இந்தாண்டு, தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவை விட கூடுதலாக பெய்தது. இம்மழையால் கேரளா, தேனி மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது. பெரியாறு, வைகை அணையில் நீர் மட்டம் ஓரே நாளில் கிடு, கிடு என 6 அடிக்கு மேல் உயர்ந்தது. பெரியாறு அணை 142 அடிக்கு உயர்ந்தது. 23 ஆயிரம் கன அடிக்கு மேல் அணைக்கு தண்ணீர் வந்ததால், உபரி நீர் கேரள பகுதிக்கு திருப்பிவிடப்பட்டது.

இதேபோன்று, மூலவைகை, பகுதியில் பெய்த கன மழையால் வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியை தொட்டது. இதனால் வெள்ள நீர் வைகை அணையில் திறந்துவிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து மழையும் அவ்வப்போது நன்றாகத்தான் பெய்தது. தற்போது வடகிழக்கு பருவமழை அக்டோபரில் துவங்கியது. டிசம்பர் மாதத்துடன் முடிவடையும். இந்நிலையில் கடந்தமாதம் கஜா புயலால் 2 நாள் நன்றாக மழை பெய்தது. இதனால் மீண்டும் வைகை அணையின் நீர் மட்டம் உயர்ந்து, அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால், மதுரை மாவட்டத்தில், புயல் காரணமாக வடகிழக்கு பருவமழை அளவு குறைந்துள்ளது.

மாவட்டத்தில், இந்தாண்டு மே, ஜூலை, செப்டம்பர் ஆகிய 3 மாதத்தில் மட்டுமே மழை எதிர்பார்த்த அளவைவிட கூடுதலாக பெய்தது. மற்ற மாதத்தில் மழையின் அளவு குறைந்தது. மொத்ததில் மழையளவு குறைந்துள்ளது. கடந்த ஜனவரியில் பெய்ய வேண்டிய மழையானது 22.40 மி.மீட்டர். ஆனால் பெய்தது 1.36 மி.மீட்டர்தான். பிப்ரவரியில் 13 மி.மீக்கு பதில் 4.15 மி.மீட்டரும். மார்ச்சில் 20.60 மி.மீட்டருக்கு பதில் 5.80 மி.மீட்டரும். ஏப்ரலில் 59.80 மி.மீட்டருக்கு பதில் 36.19 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது. மே மாதத்தில் மட்டும் 63.80 மி.மீ. மழை பெய்ய வேண்டும் ஆனால் அதிகபட்சமாக 135.69 மி.மீட்டர் மழை பெய்தது. ஜூன் மாதத்தில் 39.80 மி.மீட்டருக்கு பதில் 13.40 மி.மீட்டரும். ஜூலை மாதத்தில் 44.10 மி.மீ.க்கு பதில் 64.93 மி.மீட்டரும், ஆகஸ்டில் 96.15 மி.மீக்கு பதில் 53.39 மி.மீட்டரும் மழை பெய்தது. செப்டம்பரில் 108 மி.மீ.க்கு பதில் 158.09 மி.மீட்டரும், அக்டோபரில் 200.70 மி.மீட்டருக்கு பதில் 158.48. மி.மீட்டரும், நவம்பரில் 142.68 மி.மீட்டருக்கு பதில் 89.43 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது.

மாவட்டத்தில் ஜனவரி முதல் நவம்பர் வரை மொத்தம் 811.34 மி.மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் 720.91 மி.மீட்டர் மழை மட்டும் பெய்துள்ளது. இது நமக்கு பெய்ய வேண்டிய அளவை விட 90.43 மி.மீட்டர் மழை குறைவாக பெய்துள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை வரும் 17ம் தேதி வரை மட்டுமே எதிர்பார்க்க முடியும். இந்தாண்டு, தென்மேற்கு, வடகிழக்கு பருவமழையும், புயல்மழை பெய்தும். கிடைக்க வேண்டிய அளவைவிட மழைப்பொழிவு குறைவாகவே இருக்கிறது.

Related Stories: