மதுரை மாநகராட்சியில் வார்டு பகுதியில் முதன்முறையாக சிறப்பு முகாம்

மதுரை, டிச. 7: வரிவிதிப்பு, பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு உள்ளிட்டவை தொடர்பாக முதன்முறையாக மாநகராட்சியின் வார்டு பகுதியில் சிறப்பு முகாம் நடந்தது.மதுரை மாநகராட்சியில் இதுவரை மண்டல அலுவலகத்தில் அமர்ந்து, பொதுமக்களிடம் குறைதீர் மனுக்களை கமிஷனர் மற்றும் அதிகாரிகள் பெற்று வந்தனர். இதனால் பல பகுதியில் இருந்து பொதுமக்கள் மண்டல அலுவலகத்தில் வந்து மனுக்கள் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து வார்டு அலுவலகத்தில் சிறப்பு முகாம் அமைத்து மனுக்களை பெறுவது என மாநகராட்சி ஆணையர் அறிவித்தார். அதன்படி நேற்று மாநகராட்சி மண்டலம் 1ல் வார்டுகள் 21 மற்றும் 22ம் பகுதியில் உள்ள பொது மக்களுக்கான சிறப்பு முகாம் நேற்று சம்மட்டிபுரம் வார்டு அலுவலகத்தில் நடந்தது. கமிஷனர் அனீஷ்சேகர் தலைமை வகித்து மனுக்களை பெற்றார்.

இதில் புதிய வரிவிதிப்பில் பெயர் மாற்றம், காலிமனை வரி விதிப்பு, குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, தொழில் உரிமம் வழங்குதல், புதுப்பித்தல், தொழில்வரி விதித்தல் தொடர்பாக மொத்தம் 68 மனுக்கள் பெறப்பட்டன.உரிய ஆவணங்கள் மற்றும் கட்டணம் செலுத்துவதற்கான வசதிகள் முகாமில் செய்யப்பட்டிருந்தது. இதற்கான கட்டணம் செலுத்திய 39 மனுதாரர்களுக்கு உடனுக்குடன் அனுமதி ஆணையினை கமிஷனர் வழங்கினார். புதிய வீட்டுவரிக்காக பெறப்பட்ட 9 மனுக்களுக்கு வரி நிர்ணயம் செய்யப்பட்டது. இவற்றை கம்யூட்டரில் பதிவேற்றம் செய்து இதற்கான உத்தரவு வழங்கப்பட உள்ளது.

நிகழச்சியில் துணை கமிஷனர் மணிவண்ணன், நகரமைப்பு அலுவலர் ரெங்கநாதன், நகர்நல அலுவலர் டாக்டர் சதிஷ்ராகவன், உதவி ஆணையர் (பொ) முருகேசபாண்டியன், (வருவாய்) ரெங்கராஜன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், உதவிப்பொறியாளர் பாபு உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: