பழநியில் பைப்லைன் உடைந்து வீணாகும் குடிநீர் கழிவுநீர் கலப்பதால் நோய் அபாயம்

பழநி, டிச. 7: பழநியில் பைப்லைன் உடைந்து வீணாகும் குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பழநி நகரில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பாலாறு- பொருந்தலாறு அணையில் இருந்தும், கொடைக்கானல் சாலையில் உள்ள கோடைகால நீர்த்தேக்கத்தில் இருந்தும் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் பெறப்படுகின்றன. இக்குடிநீர் குழாயில் கடந்த சில தினங்களாக நகர் பகுதியில் ஆங்காங்கே உடைப்பு ஏற்படுகிறது. கழிவுநீர் கால்வாய் அருகில் செல்லும் பைப்லைனில் உடைப்பு ஏற்படுவதால் குடிநீரும், கழிவுநீரும் ஒன்றாக கலக்கும் அபாயம் ஏற்படுகிறது.

இதுகுறித்து பஸ்நிலைய பகுதியைச் சேர்ந்த ராமசாமி கூறியதாவது,பழநி பஸ்நிலைய எதிர்புறம், குளத்து ரோடு பைபாஸ் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு குடிநீர் பைப்லைன் உடைந்து நீண்ட நாட்களாக தண்ணீர் வீணாகி வருகிறது. தற்போது அணைகளில் நீர் நிரம்பி உள்ளது. இதனால் தேவைக்கு தண்ணீர் கிடைத்து விடுகிறது. இதன் காரணமாக குடிநீர் உடைப்புகளை சரிசெய்வதில் நகராட்சி அதிகாரிகள் உரிய அக்கறை காட்டுவதில்லை. குடிநீர் குழாய் உடைப்பு குறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் கொடுத்தும், பலனேதுமில்லை.

இதுபோல் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் காலேஜ் மேடு பகுதியிலும் குடிநீர் பைப்லைன் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது.

கழிவுநீர் கால்வாய் அருகே பைப்லைன் உடைந்துள்ளதால் குடிநீருடன், கழிவுநீரும் கலக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இக்குடிநீரை குடிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்றுநோய் ஏற்படும். எனவே, நகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து குடிநீர் பைப்லைன் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: