×

திருக்கடையூரில் குண்டும், குழியுமான சாலையில் தேங்கும் மழைநீரில் கொசு உற்பத்தியாகும் அவலம் பொதுமக்கள் அவதி

தரங்கம்பாடி,டிச.7: திருக்கடையூரில் தேரோடும் வீதிகள் குண்டும், குழியுமாக உள்ளதால், மழைநீர் பல நாட்களாக தேங்கி நிற்கின்றது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவதிப்படுகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாகை மாவட்டம் திருக்கடையூரில் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் எமனை சமஹாரம் செய்த காலசம்காரமூர்த்தி தனி சன்னதியில் இருந்து அருள்பாலித்து வருவதால் 60,70,80 பிறந்த நாளில் இங்கு வந்து ஆயுள்ஹோமம் செய்து கொள்வது சிறப்புடையதாக கருதப்படுகிறது. அதன் காரணமாக தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பலபகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக 100க்கும் மேற்பட்ட  வாகனங்கள் வருகின்றன. இக்கோயிலில் வருடாவருடம் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கோயிலை சுற்றியுள்ள 4 வீதிகளிலும் நடைபெறும். அந்த 4 வீதிகளில் மேலவீதியும் வடக்குவீதியும் மிகவும் மோசமடைந்து குண்டும் குழியுமாக உள்ளன. தொடர் மழையால் குழிகளில் தண்ணீர் தேங்கி சாலையில் நடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது. மேலும் கொசுகள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையும் உள்ளது. அதனால் அரசு இதில் கவனம் செலுத்தி தேரோடும் வீதிகளில் புதிய தார்சாலை அமைத்து தர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : village ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...