பாபர் மசூதி இடிப்பு தினம் விமான நிலையத்தை முற்றுகையிட்ட 220 பேர் கைது திருச்சியில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம்

திருச்சி, டிச. 7: பாபர்மசூதி இடிக்கப்பட்ட தினத்தையொட்டி திருச்சியில் விமான நிலையத்தை முற்றுகையிட்ட மமக கட்சியை சேர்ந்த 220 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.டிசம்பர் 6ம்தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தையொட்டிநேற்று திருச்சியில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தமுமுக சார்பில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்தும், அதே இடத்தில் மசூதி கட்டித்தர வேண்டும், பாபர்மசூதியை இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சத்திரத்தில் உள்ள அண்ணா சிலை அருகே தமுமுக மாவட்ட தலைவர் முகமது ரபீக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் அப்துல் ரகீம் (எ) பாபு முன்னிலை வகித்தார்.

மாநில பொருளாளர் கோவை உமர், இலக்கிய பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் பேசினர். மாவட்ட ஜமாத்துல் உலமா சபை முகமது சிராஜுதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஹபீப் ரஹ்மான், தமுமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஜாபர் அலி உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் மாநில இணை பொது செயலாளர் ரிபாயி தலைமையில் துணை செயலாளர் ஷமீம் அகமது, மாநில துணை செயலாளர் ஷேக் அப்துல்லா, விவசாய அணி மாநில செயலாளர் முபாரக், மாவட்ட செயலாளர்கள் அஷ்ரப் அலி, அக்பர் அலி, சேக் இஸ்மாயில் உள்ளிட்ட சுமார் 200க்கும் மேற்பட்டோர் திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிடுவதற்காக வயர்லெஸ் ரோட்டில் இருந்து ஊர்வலமாக வந்தனர். அவர்களை போலீசார் விமான நிலையம் முன்புறமுள்ள சிக்னல் பகுதியில் தடுப்பு அமைத்து நிறுத்தினர். பின்னர் தடையை மீறி முற்றுகையிட முயன்ற 220 பேரை போலீசார் கைது செய்தனர்.

எஸ்டிபிஐ சார்பில் பாலக்கரை ராமகிருஷ்ணா பாலம் அருகில் மாவட்ட தலைவர் ஹஸ்ஸான் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ மாநில துணை தலைவர் முகமது சேக் அன்சாரி, மாவட்ட ஜமாத்துல் உலமா சபை செயலாளர் அப்துல் ரகீம், தூய மரியன்னை பேராலய பங்கு தந்தை சகாயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கையில் செங்கல் ஏந்தி கோஷமிட்டனர். 3 பகுதிகளில் ஆர்ப்பாட்டம், முற்றுகை போராட்டம் நடந்ததால் பாதுகாப்பு பணிக்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

Related Stories: