×

வைகுண்ட ஏகாதசி விழா ரங்கம் ரங்கநாதர் கோயிலில் பகல்பத்து உற்சவம் நாளை துவக்கம் 18ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு

திருச்சி, டிச. 7: ரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசிவிழா பகல்பத்து உற்சவத்துடன் நாளை (8ம் தேதி) துவங்குகிறது. இன்று திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியும், வருகிற 18ம் தேதி சொர்க்கவாசல் திறப்பும் நடைபெறுகிறது.108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரியது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலாகும். இக்கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெறுகிறது. முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி விழா மார்கழி மாதத்தில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து திருமொழி திருவிழா நாளை (8ம் தேதி) துவங்குகிறது. இதையொட்டிஇன்று (7ம் தேதி) திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி மூலஸ்தானம் முன்பு காயத்ரி மண்டபத்தில் இன்று இரவு 7 மணிக்கு துவங்கி நடைபெறும். நிகழ்ச்சியில் அரையர்கள், பட்டர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள். பகல்பத்து உற்சவம் நாளை (8ம் தேதி) துவங்குகிறது. அதையடுத்து பகல்பத்து உற்சவ காலத்தில் நம்பெருமாள் தினமும் மூலஸ்தானத்தில் இருந்து பல்வேறு விதமான அலங்காரத்தில் விலைமதிப்பில்லா திருவாபரணங்கள் அணிந்து வந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

பகல்பத்து நிகழ்ச்சியின் 10ம் நாளான 17ம் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரமும் 18ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்தாண்டு சொர்க்கவாசல் வருகிற 18ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. சொர்க்கவாசல் திறப்பு அன்று நம்பெருமாள் ரத்தினஅங்கி அணிந்து வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். சொர்க்கவாசல் திறப்பு தினமான 18ம் தேதி முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் துவங்குகிறது. ராப்பத்து நிகழ்ச்சியின் 7ம் நாளான 24ம் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், 8ம் நாளான 25ம் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 10ம் நாளான 27ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் மறுநாள் 28ம் தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.


Tags : Vaikuntha Ekadasi Festival Derangaval ,festival ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...