×

மாநகராட்சி அலுவலகம் அருகில் பாதையில் தேங்கிய கழிவுநீரால் தொற்று நோய் அபாயம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருச்சி, டிச. 7: திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பாதையில் குளம் போல் தேங்கிய கழிவுநீரால் தொற்று நோய் அபயாம் ஏற்பட்டுள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சியை குப்பையில்லா நகரமாக மாற்ற பல்வேறு  நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதேபோல் குடியிருப்புகள், கடைகள்,  வர்த்தக நிறுவனங்களில் இருந்தும் கழிவுநீரை சாலையில், நடைபாதையில்  வெளியேற்றக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும்  நடவடிக்கையில்  மாநராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாநகராட்சி அலுவலகத்திலேயே பாதையில் குளம் தேங்கிய கழிவுநீர் குறித்து நடவடிக்கை எடுக்காதது மாநகராட்சி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாநகராட்சி அலுவலகத்தின் பின்புறம் மாநகராட்சி கேன்டீன் செயல்பட்டு வருகிறது. இந்த கேன்டீனில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக பாதையில் திறந்து விடப்படுகிறது. இந்த பாதை வழியாகத்தான் மாநகராட்சி பின்பகுதியில் இயங்கி வரும் சேவை மையம், குடிநீர் வடிகால் பிரிவு அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். ஆனால் கேன்டீனில் இருந்து வெளியேறும் நீர் பாதையின் ஓரத்திலும், பாதையிலும் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் தூர்நாற்றம் வீசுகிறது. குடிநீரேற்று நிலையம், சேவை மையத்திற்கு செல்வோர் மூக்கை பிடித்தபடி சென்று வருகின்றனர். குளம்போல் வாரக்கணக்கில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Municipal Corporation ,
× RELATED அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி