×

ஐராவதீஸ்வரர் கோயில் வளாகத்தில் எப்போது வேண்டுமானாலும் விழும் அபாயத்தில் புளியமரம் பக்தர்கள் அச்சம்.

கும்பகோணம், டிச. 7: ஐராவதீஸ்வரர் கோயில் வளாகத்தில் இடி விழுந்து எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ள பழமையான புளியமரத்தை விரைந்து அகற்ற வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கும்பகோணம் அடுத்த தாராசுரத்தில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட ஐராவதீஸ்வரர் கோயில் உள்ளது. இது யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டது. கோயில் வளாகத்தில் உலகத்தை வியக்கும் வகையில் அரியவகை சிற்பங்கள் உள்ளன.அதனால் இந்த கோயிலில் தினம்தோறும் வெளிநாடு, வெளிமாநிலம், வெளிமாவட்ட, உள்ளூர் மக்கள் ஏராளமானோர் வந்து சுவாமியை தரிசனம் செய்து விட்டு கோயில் பிரகாரத்தில் உள்ள சிற்பங்களை பார்வையிட்டு செல்வர்.இந்த கோயில் தற்போது தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தின்கீழும், இந்திய தொல்பொருள் துறையின் பராமரிப்பிலும் இருந்து வருகிறது. கோயிலில் உள்ள சிற்பங்கள் அடிக்கு 1,008 சிற்பங்கள் என்ற சிறப்பும் உண்டு. கும்பகோணம் பகுதியில் உள்ள கோயிலுக்கு செல்பவர்கள் தாராசுரம் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு பிறகு கோயிலின் வளாகத்தில் உள்ள புல்தரைகளில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு விட்டு இளைப்பாறி செல்வர்.

கடந்த சில நாட்களுக்கு முன் பலத்த மழை பெய்தது. அப்போது வளாகத்தில் 100 ஆண்டுகள் பழமையான புளியமரத்தில் இடி விழுந்தது. இதனால் மரம் இரண்டாக பிளந்து ஒரு பகுதி விழுந்தது. தற்போது மீதமுள்ள ஒரு பகுதி எப்போது விழுமோ என ஆபத்தான நிலையில் உள்ளது.மேலும் இடியுடன் மழை பெய்தாலோ அல்லது பலத்த காற்று அடித்தாலோ 100 ஆண்டுகள் மிகவும் பழமையான புளியமரம் கீழே விழுந்தால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் நிலை கேள்விக்குறியாகி விடும். எனவே தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் ஆபத்தான நிலையில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான புளியமரத்தை அகற்ற வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : pilgrims ,temple premises ,Eravathiswarar Temple ,
× RELATED நாகூர் தர்காவில் 467வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்