×

விபத்தில் சிக்கும் வாகனங்கள் கோத்தகிரி சக்திமலை சாலையை சீரமைக்க வேண்டும்

கோத்தகிரி, டிச.7: கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் இருந்து சக்திமலைக்கு செல்லும் சாலையில் கடைகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. சக்திமலை பகுதியில் புகழ்பெற்ற முருகன் கோவில் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி, அளக்கரை கூட்டு குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை உள்ளன.
இந்த பகுதிகளுக்கு செல்ல கடந்த சில ஆண்டுக்கு முன் கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.20 லட்சம் செலவில் ராம்சந்த் சதுக்கத்தில் இருந்து தார்ச்சாலை அமைக்கப்பட்டது. அதன் பிறகு பெய்த பலத்த மழையின் காரணமாக சாலை சேதமானது.

இதனைதொடர்ந்து, மழையால் சேதமான சக்திமலை சாலை மற்றும் மாதா கோவில் சாலை, மார்க்கெட் சாலைகளை சீரமைக்க மொத்தம் ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
அதை தொடர்ந்து சாலைகளும் சீரமைக்கப்பட்டன. ஆனால் அளக்கரை கூட்டு குடிநீர் திட்டப்பணிகளுக்காக சக்திமலை பகுதிக்கு கனரக வாகனங்கள் இயக்கபட்டதாலும், அந்த பணிகள் சாலையில் வைத்தே மேற்கொள்ளப்பட்டதாலும் சக்திமலை சாலை மிகவும் பழுதடைந்தது. தற்போது குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் அந்த சாலையில் செல்லும் வாகன ஒட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சாலை குறுகிய அகலம் கொண்டதாக இருப்பதால் சாலையோரத்தில் நடந்து செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Kotagiri Puthuramalai ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி