புளியம்பட்டி அந்தோணியார் ஆலய பகுதியில் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம்

ஓட்டப்பிடாரம், டிச.6:

புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலயத்தை சுற்றியுள்ள இடங்களில் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர். புளியம்பட்டியில் புனித அந்தோணியார் ஆலய வளாகத்தை சுற்றிலும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் தனிநபர்கள் பலர் ஆக்கிரமிப்புகள் செய்திருப்பதாகவும் அதனை அதிகாரிகள் உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் கூறி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குறிப்பிட்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

 இதையடுத்து நேற்று முன்தினம் புளியம்புட்டியில் ஆக்கிரமிப்பு இடங்களை கண்டறியும் வகையில் ஓட்டப்பிடாரம் தாசில்தார் காளிராஜ் தலைமையில் அளவிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் ஆக்கிரமிப்பு கண்டறியப்பட்ட இடங்களை ஓட்டப்பிடாரம் பிடிஓக்கள் நவநீதகிருஷ்ணன், இசக்கியப்பன் முன்னிலையில் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஜேசிபி மூலம் இடித்து அப்புறப்படுத்தினர். இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமலிருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: