மாநில ஹாக்கி போட்டி கோவில்பட்டி லட்சுமியம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி வெற்றி

கோவில்பட்டி, டிச.6: சிவகாசியில் நடந்த மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் கோவில்பட்டி லட்சுமியம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியினர் வெற்றி பெற்றனர்.  சிவகாசியில் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஹாக்கி கிளப் சார்பில் மாநில அளவிலான 14 வயதிற்கு உட்பட்டோருக்கான ஹாக்கி போட்டி 2 நாட்கள் நடந்தது. இப்போட்டியில் கோவில்பட்டி லட்சுமியம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 12 அணிகள் கலந்து கொண்டன. போட்டியின் முதல் இரண்டு சுற்றுக்கள் நாக்அவுட் முறையில் நடந்தது. இதில் கோவில்பட்டி லட்சுமியம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியினர், புதுச்சேரி அணியை 1:0 எனும் கோல்கணக்கிலும், மதுரை விளையாட்டு விடுதி அணியை 4:2 என்ற கோல்கணக்கிலும் வெற்றி பெற்று லீக் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

லீக்சுற்றில் கோவில்பட்டி லட்சுமியம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி மதுரை திருநகர் ஹாக்கி அகாடமி அணியை 5:0 என்ற கோல்கணக்கிலும், ராம்நாடு எஸ்.டி.ஏ.டி.டேலண்ட் ஹண்ட் அணியை 2:0 என்ற கோல்கணக்கிலும் வெற்றி பெற்று கோப்பை தட்டி சென்றது.  போட்டியில் வெற்றி பெற்ற கோவில்பட்டி லட்சுமியம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியை பாராட்டி ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு, சுழற்கோப்பையும், சிறப்பாக விளையாடிய இதே அணியை சேர்ந்த வீரர்கள் பாரத், மாதேஸ் ஆகியோருக்கு சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான விருதும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணியை கோவில்பட்டி கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் அருணாசலம், நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம், முதல்வர் சண்முகவேல், கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் கண்ணப்பன், லட்சுமியம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன், உடற்கல்வி இயக்குநர்கள், லட்சுமியம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி பயிற்சியாளர்கள், அனைத்து பள்ளி ஆசிரியர்கள், பேராசிரியர்கள் பாராட்டினர்.

Related Stories: