பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்க 40 மருத்துவ குழுக்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

வேலூர், டிச.7:வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடி மையங்களின் மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்க 40 மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறைகள் மேற்கொண்டு வருகின்றன. வேலூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் பனிப்பொழிவும் காணப்படுவதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். பொதுமக்களுக்கு மழை காலங்களில் ஏற்படும் வயிற்றுப்போக்கு, காலரா, காய்ச்சல், மலேரியா போன்ற நோய்களை தடுக்க பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள், அரசு ஆரம்பபள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும மாணவ, மாணவிகளுக்கு வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் மற்றும் உடல் நல பாதிப்புகளிலிருந்து காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:வேலூர் மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவழை தொடங்கி உள்ளது. இக்காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் நோய்களை தடுப்பதற்கான ஏற்பாடுகளில் சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. குழந்தைகளை மழைக்கால நோய்கள் தாக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய சுகாதார குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒன்றியத்துக்கு 2 குழுக்கள் வீதம் மொத்தம் 40 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் வாகனங்களில் சென்று அந்தந்த அங்கன்வாடிகள், பள்ளிகளில் படிக்கும் அனைத்து குழந்தைகளை பரிசோதனை செய்வார்கள். அப்போது குழந்தைகளுக்கு ஏதாவது காய்ச்சல் மற்றும் இருமல், சளி போன்ற மழைக்கால பாதிப்புகள் இருந்தால் அவர்கள் உடனடியாக சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுப்பார்கள். மேலும் ரத்த பரிசோதனை செய்து மேல்சிகிச்சை அளிக்கவும் பரிந்துரை செய்யப்படும். தொடர்ந்து அவர்களை மருத்துவர்கள் கண்காணித்து வருவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினார்.

Related Stories: