×

வேலூர் நேதாஜி மார்க்கெட் ₹60.82 கோடியில் நவீன முறையில் கட்ட ஏற்பாடு உத்தரவாதமும், மாற்று இடமும் வழங்க வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் வியாபாரிகள் கோரிக்கை

வேலூர், டிச.7: வேலூர் நேதாஜி மார்க்கெட் ₹60.82 கோடியில் நவீனமுறையில் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் வியாபாரிகளுக்கு மாற்று இடமும், உத்தரவாதமும் வழங்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர்.வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நேதாஜி மார்க்கெட்டை நவீனமுறையில் கட்டுவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் ராமன் தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் சிவசுப்பிரமணியம் வரவேற்றார்.இதில் ஸ்மார் சிட்டி அதிகாரிகள், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டு பேசியதாவது:கலெக்டர்: வேலூர் நேதாஜி மார்க்கெட்டை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ₹60.82 கோடியில் நவீனமய கட்டிடமாக மாற்றப்பட உள்ளது. புதிய கட்டிடம் கட்டும்போது ஒரு சில இடர்பாடுகள் வரலாம். கட்டிட வரைபடம் குறித்து வியாபாரிகள் கருத்துக்கள் தெரிவிக்கலாம். .ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகள் குழு: புதிய திட்டத்தில் மார்க்கெட் கீழ்தளத்தில் 252 கடைகளும், தரைத்தளத்தில் 224 கடைகளும், முதல் தளத்தில் 269 கடைகளும் என மொத்தம் 745 கடைகள் அமைக்கப்படும். மேலும், 2வது தளத்தில் வாகன நிறுத்துமிடம் அமைய உள்ளது.

கலெக்டர்: காய்கறி வாங்க வருவோர், 2வது தளத்திற்கு சென்று வாகனத்தை நிறுத்திவிட்டு கீழ்தளத்தில் வந்து காய்கறி வாங்குவார்களா? இது சாத்தியமா? (கலெக்டரின் கருத்துக்கு, வியாபாரிகள் ஆதரவு தெரிவித்தனர்)திட்ட குழு: இதுபோன்ற விவரங்களை அறியவே, இதை தெரிவித்தோம். இந்த யோசனை ஏற்கப்படும்.வேலூர் மாவட்ட அனைத்து வணிகர் சங்க தலைவர் ஞானவேல் பேசியதாவது:தற்போது உருவாக்கப்பட்டுள்ள நேதாஜி மார்க்கெட் வரைபடத்தை பார்த்தால், சென்னை உள்ளிட்ட மாநில தலைநகரங்களுக்கு மட்டுமே வசதியாக இருக்கும். மாவட்ட தலைநகரத்திற்கு பொருந்துவது கேள்விக்குறிதான். ஏற்கனவே சாரதிமாளிகை 2ம் தளத்தில் 10க்கும் மேற்பட்ட கடைகள் காலியாக உள்ளது. இது சமூக விரோதிகளுக்கு மிக வசதியாக அமைந்துவிட்டது. எனவே பழைய மீன்மார்க்கெட்டை வாகன நிறுத்துமிடமாக அமைத்து வருமானம் அதிகரிக்க வழி செய்யலாம். ஆண்டுதோறும் மாநகராட்சிக்கு ₹1.20 கோடி குத்தகை மூலம் வருவாய் ஈட்டித்தரும் 300 தற்காலிக கடைகள் வரைபடத்தில் இடம்பெறவில்லை. இதேபோல் பல தலைமுறைகளாக வியாபாரம் செய்துவரும் 1069 வணிகர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஏலம் நடத்தாமல் கடைகள் தரவேண்டும். வரைபடத்தை மாற்றி அமைத்து 300 தற்காலிக கடைகளுக்கும் இடம் தரவேண்டும். பழைய மீன்மார்க்கெட் கட்டிடத்தையும் இணைத்து புதிய வரைபடத்தை தயாரிக்கவேண்டும். கட்டிடப்பணி தொடங்கும்போது அவர்களுக்கு தற்காலிக மாற்று இடம் ஒதுக்கவேண்டும். இந்த இரு உத்தரவாதங்களை கலெக்டர் வழங்கினால் நாங்கள் தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்போம். இல்லையென்றால் கூட்டத்தை புறக்கணிப்போம்.கலெக்டர்: உங்கள் கோரிக்கைகளை இப்போதுதான் முதன்முறையாக சொல்லியிருக்கிறீர்கள். அதற்குள் கூட்டத்தை புறக்கணிப்பதா? இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி தகவல் தெரிவிக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Tags : Vellore Netaji Market ,space ,
× RELATED மனவெளிப் பயணம்