×

பஸ் ஸ்டாப்பைவிட்டு தள்ளி கட்டப்பட்டுள்ளது நிழற்குடை இருக்கு...நிற்கதான் முடியவில்லை... வெயிலில் மண்டைகாயும் மக்கள்

சிவகாசி, டிச.6:  சிவகாசி நகராட்சி பகுதியில் கட்டப்பட்டுள்ள பல பயணிகள் நிழற்குடை பயன்பாடின்றி சேதமடைந்து வருகிறது.  சிவகாசி நகர் பகுதியில் வெளியூர், உள்ளூர் பேருந்துகள் நின்று செல்ல 15க்கும் மேற்பட்ட இடங்களில் பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிறுத்தங்களில் பயணிகள் காத்திருந்து செல்ல நகராட்சி பொது நிதி மற்றும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து பயணிகள் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பல இடங்களில் பஸ்நிறுத்தங்கள் அருகில் பயணிகள் நிழற்குடை அமைக்காமல் சற்று தொலைவில் அமைத்துள்ளனர். சிவகாசி-சாத்தூர் ரோட்டில் கம்மவார் மண்டபம், சிவகாசி-விருதுநகர் ரோட்டில் பைபாஸ், குறுக்கு பாதை, சிவகாசி-திருவில்லிபுத்தூர் சாலையில் பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம், சாட்சியாபுரம் ஆகிய இடங்களில் பல லட்சம்  மதிப்பில் பயணிகள் நிழற்குடை பஸ் நிறுத்தத்தை விட்டு சற்று தொலைவில் அமைத்துள்ளனர்.

இதனால் இந்த நிழற்குடைகளை பயணிகள் பயன்படுத்த தயக்கம் காட்டி வருகின்றனர். நிழற்குடையில் மாடுகள், மனநலம் பாதிப்படைந்தவர்கள், கடைகள் அமைத்து ஆக்கிரமித்து வருகின்றனர். மேலும் பயன்பாடின்றி உள்ள இந்த பயணிகள் நிழற்குடை சேதமடைந்து வருகிறது. இதனால் நகராட்சி மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் பணம் வீணாகி வருகிறது. எனவே பயன்பாடின்றி கிடக்கும் நிழற்குடைகளை பராமரித்து அதன் அருகில் பஸ்கள் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சிவகாசி நகரின் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளதால் அடிக்கடி விபத்துக்கள்  ஏற்பட்டு வருகின்றன. சாலைகளில் குவிந்து கிடக்கும் புழுதியால் மக்கள் சுவாச கோளாறு போன்றவற்றுக்கு பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே சாலைகளை சீரமைத்து புழுதி மணலை அகற்ற நகராட்சி நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   சமூக ஆர்வலர் கண்ணன் கூறுகையில், ‘‘சிவகாசி நகராட்சியில் தற்போது  வரிகள்  பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன.

ஆனால் கிராம ஊராட்சிகளில் இருப்பது போன்று சாலைகள் உள்ளன. சாலையில் புழுதி பறப்பதால் மக்கள் நோய் வாய்ப்பட்டுள்ளனர். சாலை முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. வரிகளை உயர்த்திய நகராட்சி நிர்வாகம் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முறையாக செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி பகுதியில் பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்’’ என்றார்.


Tags : bus stop ,
× RELATED ஈரோட்டில் குறைந்த கட்டணத்தில் உடனடி...