×

சிவகாசி நகராட்சி 7வது வார்டில் தெருக்களில் தேங்கி நிற்கும் கழிவுநீர் சுகாதாரக்கேட்டால் மக்கள் அவதி

சிவகாசி, டிச.6: சிவகாசி நகராட்சி ஞானகிரி ரோட்டில்  வாறுகால் சேதமடைந்து கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதாரக் கேடு, தொற்றுநோய் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.    சிவகாசி நகராட்சி 7வது வார்டில் கருப்பணன் தெரு, வள்ளலார் தெரு, காரனேசன் காலனி, பழனியாண்டவர் காலனி, ஞானகிரி ரோடு பகுதிகள் உள்ளன.  இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த வார்டில் உள்ள ஞானகிரி ரோட்டில்  வாறுகால்கள் சேதமடைந்து இடிந்து கிடக்கிறது. இதனால் மழை காலங்களில் கழிவு நீர் சாலைகளில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இந்த பகுதியில் பெண்கள் பள்ளி உள்ளது. பள்ளி மாணவிகள் இந்த சாலை வழியாகத்தான் வந்து செல்கின்றனர். கழிவு நீர் குளம் போல் தேங்குவதால் மாணவிகள் சிரமப்படுகின்றனர்.  மேலும் இப்பகுதியில் சுகாதார  கேடு ஏற்படுவதால் மாணவிகள் மற்றும் பொது மக்களுக்கு தொற்றுநோய் பரவும் ஆபத்து உள்ளது. எனவே வாறுகாலை சரி செய்து கழிவுநீர் தேங்குவதை சரி செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

  மக்கள் கூறுகையில், ‘‘7வது வார்டில் வாறுகால் முறையாக அகற்றப்படுவதில்லை. இதனால் பெரிய பெரிய புழுக்கள் வாறுகாலில் ஊர்ந்து செல்கின்றன.  இங்கு வசிக்கும் மக்கள் பகல்  நேரங்களிலும் வீடுகளை பூட்டியே வைத்துள்ளனர். இதே போன்று  குப்பைகள் அகற்றப்படாமல் சாலையில் சிதறி கிடப்பதால்  சுகாதார கேடு ஏற்படுகிறது.   நேசனல் காலனி, காரனேசன் காலனி பகுதி கழிவு நீர் திருத்தங்கல் ரோட்டில் உள்ள வாறுகால் வழியாக சென்று கிருதுமால் ஓடையில் கலக்கிறது.  இந்த வாறுகால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது வாறுகால் மண்மேவி கிடக்கிறது. மழை காலங்களில் வாறுகால் நிரம்பி சாலையில் ஆறாக ஓடுகிறது. எனவே வாறுகாலில் உள்ள மண்மேட்டை அகற்ற வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : municipality ,Sivakasi ,ward ,
× RELATED அடிப்படை வசதி செய்து கொடுக்க மக்கள் கோரிக்கை