×

பெரியகுளம் அரசு மருத்துவமனையில் கொசுக்கள் அதிகரிப்பால் நோயாளிகள் கடும் அவதி

பெரியகுளம், டிச.6: தேனி மாவட்டம், பெரியகுளத்தில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். உள் நோயாளிகளாகவும் 100க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது பெரியகுளம் பகுதியில் காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில் நோயாளிகள் சிகிச்சை பெறும் அறைகளில் கொசுக்கள் அதிகளவில் இருக்கிறது. அவைகள் நோயாளிகளை கடித்து ரத்தத்தை உறிஞ்சுவதோடு, டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் பரவுவதற்கும் காரணமாகிறது. குறிப்பாக அவசர சிகிச்சை வார்டில் பெரிய அளவிலான கொசுக்கள் அதிகளவில் உள்ளது. கொசுக்களினால் காய்ச்சல் பரவி வரும் நிலையில் மருத்துவமனையிலேயே நோயாளிகளை கொசுக்கள் அதிகம் கடிப்பது வேதனையடைய செய்கிறது. எனவே கொசுக்களை ஒழிக்க மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று பொதுமக்களும், நோயாளிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Periyakulam Government Hospital ,
× RELATED கூடலூரில் ரத்ததான முகாம்