×

திருச்சியை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக உருவாக்க ஒத்துழைக்க வேண்டும் பொதுமக்களுக்கு வேண்டுகோள்

திருச்சி, டிச.6: திருச்சியை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக உருவாக்கஅனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கலெக்டர் ராஜாமணி கேட்டுக்கொண்டுள்ளார். திருச்சி மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக உருவாக்குவது தொடர்பாக மாவட்ட சுற்றுச்சூழல் குழுக் கூட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் ராஜாமணி தலைமை வகித்து பேசியதாவது: கடந்த ஜூன் 5ம் தேதி சட்டப்பேரவையில் பிளாஸ்டிக் இல்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்று விதி எண் 110ன் கீழ் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் அனைத்துத் துறை அலுவலகங்களிலும், வணிக, கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. அனைத்துத் துறை அலுவலர்களும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை தடையை மீறி சேமிப்பவர், விநியோகிப்பவர், எடுத்துச் செல்பவர், விற்பனை செய்பவர் மீது அபராதம் விதிக்க நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை மற்றும் கிராமப்புற வளர்ச்சித்துறை ஆகியோர் தங்களது உள்ளாட்சி அமைப்புகளுக்கு துணை விதிகளை இந்த மாதம் 15ம் தேதிக்குள் உருவாக்க வேண்டும். அவ்வாறு உருவாக்கிய விதிகளை அனைத்து தரப்பினருக்கும் சென்றடைய தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்களாக வாழை இலை, பாக்குமர இலை, அலுமினியத்தாள், காகித சுருள், தாமரை இலை உள்ளிட்ட மாற்று பொருட்களை பயன்படுத்த வேண்டும்.இம்மாத இறுதிக்குள் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் பிளாஸ்டிக் பொருட்களினால் வரும் தீமைகள் குறித்து முக்கிய இடங்களில் புகைப்படக் கண்காட்சி நடத்த வேண்டும். மேலும் செய்தித்தாள், தொலைக்காட்சி மற்றும் வானொலி வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்த வேண்டும். ஒவ்வொரு துறை அலுவலர்களும் பிளாஸ்டிக் ஒழிப்பில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். தமிழகத்தில் பிளாஸ்டிக் இல்லா மாவட்டங்களில் முதன்மையான மாவட்டமாக திருச்சி விளங்க அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்’ என்றார்.
கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் லட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உணவகங்களில் உணவுப் பொருட்களை கட்டிக் கொடுப்பதற்கு உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள் உறை, உணவு அருந்தும் மேசை மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், தெர்மாக்கோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், பிளாஸ்டிக் தேநீர் குவளைகள், தெர்மாக்கோல் குவளைகள், பிளாஸ்டிக் குவளைகள், நீர் நிரப்ப பயன்படும் பைகள், பொட்டலங்கள், ஸ்ட்ரா, பிளாஸ்டிக் பைகள் (எந்த அளவிலும், எந்த தடிமானமாக இருப்பினும்), பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், பிளாஸ்டிக் கொடிகள், நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள் போன்ற பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அரசு தடைசெய்துள்ளது. எனவே அனைத்துத் துறை அலுவலர்களும் அரசாணையை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். சமூக ஆர்வலர்களும் முனைப்புடன் செயல்பட வேண்டும். விழிப்புணர்வு நிகழ்ச்சி அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், முக்கிய இடங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் முன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பர பதாகைகள் வைக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதனால் வரக்கூடிய தீங்குகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். பொதுமக்களும், வியாபாரிகளும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணிப்பைகள், காகித உறைகள் போன்ற மக்கும் பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

Tags : public ,Trichy ,district ,
× RELATED அதிகரித்து வரும் வெயில்...