×

குடந்தை மகாமக குளக்கரையில் துருப்பிடித்த இரும்பு தடுப்புகள் விரைந்து சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்

கும்பகோணம், டிச. 6: கும்பகோணம் மகாமக குளத்தில் துருப்பிடித்து எப்போது விழுமோ என்ற நிலையில் உள்ள இரும்பு தடுப்புகளை விரைந்து சீரமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்பகோணம்  மகாமக குளம் உலக புகழ்பெற்றதாகும். 12 ஆண்டுக்கு ஒருமுறை வரும் மாசி  மகாமகமும், ஆண்டுதோறும் வரும் மாசிமக நாளில் ஏராளமானோர் புனித  நீராடுவர். மேலும் மகாமக குளத்தை சுற்றி 16 சோடசலிங்கம் மற்றும்  குளத்தில் உள்ள 21 தீர்த்த கிணறுகளும், குளத்தையும் சேர்த்து 22 தீர்த்த  கிணறுகள் உள்ளன. மகாமக குளத்தில் தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். மேலும்  குளத்தின் பாதுகாப்பு கருதி இரும்பு தடுப்புகள,  கேட்டுகள் அமைக்கப்பட்டு அதை பராமரிக்கும் பணி  காசிவிஸ்வநாதர் கோயில் நிர்வாகத்திடம் இருந்து வருகிறது. கடந்த சில  மாதங்களுக்கு முன் மகாமக குளத்தின் மேல்கரையில் அமைக்கப்பட்ட இரும்பு  தடுப்புகள் மற்றும் கேட்டுகளின் அடியில் துருப்பிடித்து கீழே விழுந்தது. இரும்பு தடுப்பு, கேட்டுகள் கீழே விழாதவாறு சவுக்கு மரத்தை கொண்டு முட்டு கொடுக்கப்பட்டது.

இந்நிலையில்   முட்டு கொடுத்து பல மாதங்களானதால் மரங்கள் உலுத்துவிட்டது. இதனால்  இரும்பு கேட்டின் கீழ்பகுதியில் மேலும் துருப்பிடித்து தொங்கி  கொண்டிருப்பதால் முட்டு கொடுத்த சவுக்கு மரங்களும் இரும்பு கேட்டில் தொங்கி  கொண்டிருக்கிறது. இரும்பு தடுப்புகள் கீழே விழுந்தால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த மகாமகத்தின்போது  மகாமக குளத்தில் உள்ள அனைத்து கேட்டுகளையும் பிரித்து பழுதுபார்த்து மகாமகம்  முடிந்த பிறகு அமைத்தனர். ஆனால் 2 ஆண்டுகளுக்குள் இரும்பு கேட்டின்  கீழ் துருப்பிடித்து எப்போது விழுமோ என்ற நிலையில் இருப்பதை அதிகாரிகள்  கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில் கும்பகோணம்  மகாமக குளத்தில் உள்ள இரும்பு தடுப்புகளை சீரமைத்து அமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Devotees ,Mahama ,
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி