×

புயலால் விழுந்த தென்னையை அகற்ற விவசாயிகளுக்கு முன்தொகையாக தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

பேராவூரணி, நவ. 6: கஜா புயலால் விழுந்த தென்னை மரங்களை அகற்ற ஒவ்வொரு விவசாயிக்கும் முன்தொகையாக ரூ.5,000 வழங்க வேண்டுமென பேராவூரணியில் நடந்த கருத்துகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். பேராவூரணியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களின் மறு சீரமைப்பு குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. அரசு முதன்மை செயலாளரும், வேளாண் உற்பத்தி ஆணையருமான ககன்தீப்சிங் பேடி தலைமை வகித்தார். மாவட்ட தென்னை சாகுபடி விவசாய சங்க தலைவர் கலைச்செல்வன் பேசுகையில், தென்னை சாகுடிபயில் ஒரு மரத்துக்கு ஆண்டுக்கு 150 காய்கள் காய்க்கும். குறைந்தது 7 ஆண்டுகளுக்கு தொடர்ந்து மகசூல் பெறுவதால் ஒரு தேங்காயின் விலை ரூ.15 என நிர்ணயித்தால் 7 ஆண்டுக்கு ரூ.15,750 வருமானம் ஈட்டக்கூடிய அளவுக்கு இருந்தது.
இத்தகைய தொடர் வருமானம் கஜா புயலால் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு உரிய இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் என்றார்.
தென்னை விவசாய சங்கம் கோவிந்தராஜ் பேசுகையில், கஜா புயலால் சாய்ந்துள்ள மரங்களை அப்புறப்படுத்தவும், அத்யாவசிய பணிகளை மேற்கொள்ளவும் முன்தொகையாக விவசாயி ஒருவருக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் என்றார்.

முன்னாள் எம்எல்ஏ திருஞானசம்பந்தம் பேசுகையில், இந்த பகுதியில் நெல்லை தவிர தென்னையை இதுவரை நிறைய பேர் அடங்கலில் பதிவு செய்யவில்லை. பதிவு செய்யாதவர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். சாய்ந்த தென்னை மரங்களின் வேர்ப்பகுதியை பிடுங்கி அப்பறப்படுத்த பொக்லைன் இயந்திரம் வழங்க வேண்டும் என்றார். இதுபோன்று பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் கோரிக்கை, கருத்துகளை தெரிவித்தனர்.வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் பேடி பேசுகையில், கஜா புயலால் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் லட்சக்கணக்கில் தென்னை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளது. உங்களது உணர்வுகள் எனக்கு நன்றாக புரிகிறது.  சாய்ந்த தென்னை மரங்களை அகற்றுவது, புதிய மரக்கன்றுகள் நடுவது மற்றும் உங்களது அனைத்து கோரிக்கைகளும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார்.

கூட்டத்தில் வேளாண்துறை இயக்குனர் தட்சணாமூர்த்தி, தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் இயக்குனர் சுப்பையன், மத்திய அரசின் ஒருங்கிணைந்த தோட்டக்கலை இயக்க இணை செயலாளர் தினேஷ்குமார், தென்னை வளர்ச்சி மைய இயக்குனர் பால சுதாஹரி, வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனர் மதியழகன், ஒருங்கிணைந்த வேளாண்மைத்துறை இணை இயக்குனர் நெடுஞ்செழியன், துணை இயக்குனர் ஜஸ்டின், பேராவூரணி உதவி இயக்குனர் மதியரசன் மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.

Tags :
× RELATED தஞ்சாவூரில் சிறுதானிய பயிர்கள்...