×

பெண் சிசுக்களை கருவில் அழித்த ஆனந்திக்கு கோடி கணக்கில் சொத்து வருமான வரித்துறை சோதனை நடத்த முடிவு வங்கிக் கணக்கு, சொத்துக்கள் முடக்க நடவடிக்கை

திருவண்ணாமலை, டிச.5: திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான பெண் சிசுக்களை கருவில் அழித்த ஆனந்திக்கு கோடிக் கணக்கில் சொத்துக்கள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், வருமான வரித்துறை சோதனையின் மூலம் சொத்துக்கள் மற்றும் வங்கிக்கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை வேங்கிக்கால் பொன்னுசாமி நகரில் புதியதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி வீட்டில், பெண் சிசுக்களை கருவிலேயே கண்டறிந்து அழிக்கும் கொடூரம் நடப்பது கடந்த சில நாட்களுக்கு முன்பு, மருத்துவக் குழுவினர் நள்ளிரவில் நடத்திய அதிரடி சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் பெண் சிசு கருகலைப்பில் ஈடுபட்ட போலி பெண் டாக்டர் ஆனந்தி(51), அவரது கணவர் தமிழ்ச்செல்வன்(52), ஆட்டோ டிரைவர் சிவக்குமார்(48) ஆகியோரை கைது செய்யப்பட்டனர். பிளஸ்2 தேர்ச்சி பெறாத ஆனந்தி, ஆயிரக்கணக்கான பெண்களுக்கு கருகலைப்பு செய்ததும், ஏற்கனவே இரண்டுமுறை கைதாகியும் தொடர்ந்து இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், ஆனந்தியின் செல்போனுக்கு வந்த அழைப்பு எண்களை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தியதில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆனந்தியிடம் கருகலைப்புக்கு பெண்களை அழைத்துவந்ததும், அதற்கென ஏஜென்டுகள் செயல்பட்டதும் தெரியவந்தது.

ஸ்கேன் செய்து பெண் சிசு என தகவல் தெரிவிக்க அதிகபட்சம் 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை ஆனந்தி கட்டணம் வசூலித்துள்ளார். மேலும், 11 வாரங்களுக்கு உட்பட்ட கருவை கலைக்க 15 ஆயிரமும், அதிக வளர்ச்சியுள்ள கருவை கலைக்க 30 ஆயிரம் வரையும் வசூலித்துள்ளார். இதுதொடர்பாக, திருவண்ணாமலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவிக்கையில், நாளொன்று்க்கு சராசரியாக 25 பெண்களுக்கு கருகலைப்பு நடந்திருக்கலாம் என்றும், கடந்த 20 ஆண்டுகளாக கருகலைப்பில் ஈடுபட்டுள்ள ஆனந்தியின் மூலம் மட்டும் சுமார் 19 ஆயிரம் பெண் சிசுக்கள் கருவில் அழிக்கப்பட்டிருக்கலாம என்றும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். எனவே, ஆனந்தியின் விவகாரம் தற்போது தேசிய அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இது ெதாடர்பாக, மத்திய சுகாதார கண்காணிப்புக்குழு விரைவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், ஆனந்திக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. திருவண்ணாமலை வேங்கிக்கால் பொன்னுசாமி நகரில் கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான அடுக்குமாடி வீட்டின் மதிப்பு ரூபாய் ஒரு கோடிக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, அந்த கட்டிடத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

அதேபோல், 6 வங்கி கிளைகளில் ஆனந்தி மற்றும் அவரது கணவர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் பெயரில் சேமிப்பு கணக்குகள் உள்ளன. அதில், 50 லட்சத்துக்கும் அதிகமான பணம் இருப்பில் உள்ளதும், 20 லட்சம் ெடபாசிட் செய்யப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. இதுதவிர, பினாமிகள் பெயரிலும் சொத்துக்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே, வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் ஆனந்திக்கு குவிந்தது எப்படி என, வருமான வரித்துறை மூலம் சோதனை நடத்தி, ஆனந்தியின் சொத்துக்கள் மறறும் வங்கிக்கணக்குகளை முடக்கவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் டி.பாண்டியன் கூறுகையில், ஆனந்தியின் வீட்டில் நாங்கள் நடத்திய சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆனைத்து ஆவணங்களையும் போலீசிடம் ஒப்படைத்திருக்கிறோம். மேலும், ஆனந்தி உள்ளிட்ட 3 பேரின் செல்போன்களும் போலீசிடம் உள்ளது. அதில், பதிவாகியுள்ள விபரங்கள் அடிப்படையில் தீவிரமான விசாரணை நடந்து வருகிறது. போலீஸ் அறிக்கை கிடைத்ததும், எங்களுடைய அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடரும் என்றார்.

Tags : Anandhi ,infant ,
× RELATED திரில்லர் கதையில் கயல் ஆனந்தி