டாஸ்மாக் கடையை அகற்ற கோரி போராட்டம்

உளுந்தூர்பேட்டை, நவ. 21:  விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது திருநாவலூர் ஒன்றியம் மதியனூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்டது நல்லாளக்குப்பம் கிராமம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரும் இந்த கிராமத்தில், விவசாய நிலத்திற்கு செல்லும் வழியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இதனால் பெண்கள் உள்ளிட்ட விவசாய தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், இந்த வழியாக செல்லும் பெண்களிடம் குடிபோதையில் உள்ள ஆசாமிகள் ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த டாஸ்மாக் கடையை முற்றிலும் அகற்ற கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த இக்கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினருடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்தனர்.

நேற்று உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது அங்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று தாசில்தார் இளங்கோவன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

ஆனால் இதற்கு சம்பந்தப்பட்ட டாஸ்மாக் அதிகாரிகள் யாரும் வராததால் அங்கிருந்து வெளியேறிய அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சுப்ரமணியன், மாவட்ட செயலாளர் ஜெயசங்கர், ஒன்றிய செயலாளர்கள் தாமோதரன், குடியரசுமணி, மோகன், சித்ரா, சின்னப்பொண்ணு உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அப்போது அங்கு வந்த போலீசார், போராட்டம் நடத்த உரிய அனுமதியில்லை என்றும், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: