பேருந்துகள் சென்று வர பழைய கட்டிடங்கள் அகற்றும் பணி தீவிரம்

விழுப்புரம், நவ. 21:  விழுப்புரம் ரயில் நிலையத்துக்குள் பேருந்துகள் சென்று வர ஏதுவாக பழைய கட்டிடங்களை இடித்து சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. விழுப்புரம் ரயில் நிலையம் தென்மாவட்டங்களை இணைக்கக் கூடிய முக்கிய ரயில் நிலையமாக உள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லி முதல் மும்ைப, ராஜஸ்தான் உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் ரயில் வசதிகளை கொண்டுள்ள இந்த ரயில் நிலையத்தில் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் அருகில் உள்ள மாவட்டத்தில் இருந்தும் பயணிகள் கூட்டம் வந்து செல்கிறது. ரயில் நிலையத்திற்கு பேருந்து வசதியில்லாத நிலையில் நேருஜி வீதியில் உள்ள சாந்தி தியேட்டர் பேருந்து நிறுத்தத்திற்கு வர வேண்டும். நீண்ட தூரம் நடக்க வேண்டும் என்பதால் பலர் நடந்து வர முடியாமலும், மேலும் பலர் ரயில்வே மேம்பாலம் அருகே நின்று கொண்டு பேருந்துகளில் செல்கின்றனர். இதனால் மேம்

பாலம் இறக்கத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதனிடையே கடந்த 2ம் தேதி விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் உதயகுமார்ரெட்டி, ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உத்தரவிட்டிருந்தார். மேலும் ரயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் சீரமைக்க வேண்டும். வாயில் பகுதியில் பயன்படுத்தாமல் உள்ள டீசல் டேங்கர் கட்டிடங்களை, பழைய கட்டிடங்களை இடித்து அகற்றி அதன் வழியாக பேருந்துகள் இயக்கவும், பயணிகளின் வாகனங்கள் ரயில் நிலையத்திற்குள் எளிதாக வந்து செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார். அதன்படி தற்போது இந்த பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. முகப்பு பகுதியில் உள்ள பழைய கட்டிடங்கள் இடித்து சமன் செய்யப்பட்டு வருகின்றன. முகப்பு பகுதி முழுவதும் பொலிவுடன் இருக்கவும், அலங்கார வளைவுகள் அமைக்கவும் பணிகள் நடந்து வருகின்றன. பேருந்துகள், வாகனங்கள் எளிதாக சென்று வரும் வகையில் பொக்லைன் இயந்திரம் மூலம் இடதுபுறம் உள்ள கட்டிடங்களின் சுவர்கள் உடைத்து வழி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முகப்பு பகுதியில் வரவேற்பு வளைவு வைக்கப்பட்டு, வாகனங்கள், பேருந்துகள் எளிதாக ரயில் நிலையத்திற்கு சென்று வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Related Stories: