நகை, பைக் திருடிய 2 வாலிபர்கள் கைது

சிதம்பரம், நவ. 21: கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் கடந்த சில மாதங்களாக வீடுகளில் திருட்டு சம்பவங்களும், பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்களும், இருசக்கர வாகனங்கள் திருட்டும் அதிகமாக நடந்து வந்தன.

கடலூர் மாவட்ட எஸ்.பி. சரவணன் உத்தரவின் பேரில் சிதம்பரம் டிஎஸ்பி பாண்டியன் மேற்பார்வையில் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். சிதம்பரம் தாலுகா இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசாரும், சிதம்பரம் கோட்ட குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசாரும் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை சிதம்பரம் அருகே உள்ள செட்டிமேடு பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேர் மீது சந்தேகம் வர அவர்களை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது 2 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் தாலுகா காவல்நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் சிதம்பரம் தில்லைகாளியம்மன் கோயில் அருகே உள்ள எம்ஜிஆர் நகரை சேர்ந்த துரியோதனன் மகன் சூர்யா (எ) மணிகண்டன் (21), சிதம்பரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த முனுசாமி மகன் அரவிந்த் (20) என்பதும் சிதம்பரம் தாலுகா காவல்நிலையம் மற்றும் அண்ணாமலை நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நகைகள் மற்றும் பைக்குகள் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டன், அரவிந்த் மீது சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 12 பவுன் செயின், 400 கிராம் வெள்ளி, விலையுயர்ந்த 2 பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கலாம் என கூறப்படுகிறது.

Related Stories: