அரசு பேருந்தை மீண்டும் இயக்க கோரிக்கை

திருக்கோவிலூர், நவ. 21:  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருக்கோவிலூரில் இருந்து ஆயந்தூர், விழுப்புரம் வழியாக சென்னைக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டது. தினசரி காலை 9 மணிக்கு திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த பேருந்து சு.கொல்லூர், வி.புத்தூர், மேலக்கொண்டூர், கீழக்கொண்டூர், பரனூர், காக்காகுப்பம், வீரசோழபுரம், ஆற்காடு, ஆயந்தூர் வழியாக விழுப்புரம் சென்று பின்னர் அங்கிருந்து நேரடியாக சென்னைக்கு சென்று வந்தது. இந்த பேருந்தால் இப்பகுதியை சேர்ந்தவர்கள் நேரடியாக அருகில் உள்ள விழுப்புரத்திற்கும், சென்னைக்கும் தங்கள் கிராமங்களில் இருந்து சென்று வந்து அதன்மூலம் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர். குறைந்த அளவு பேருந்து வசதி உள்ள இந்த வழித்தடத்தில் வருவாய் நோக்கம் இல்லாமல்  பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளின் வசதிக்காகவே இயக்கப்பட்டு வந்தது. மேலும் இந்த பேருந்தால் பலரும் பயனடைந்த வேளையில் போதிய வருவாய் இல்லை என்ற காரணத்தை கூறி போக்குவரத்து கழக அதிகாரிகள் இந்த பேருந்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக மாற்று வழித்தடத்தில் இயக்கி வருகின்றனர்.

ஆனால் சென்னையில் இருந்து இரவு 11 மணிக்கு இயக்கப்பட்டு இதே வழித்தடத்தில் இந்த பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் கடந்த இரண்டு வருடங்களாக நேரடியாக மாவட்டத்தின் தலைநகராக விழுப்புரத்திற்கும், மாநில தலைநகரான சென்னைக்கும் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட திருக்கோவிலூரில் இருந்து ஆயந்தூர், விழுப்புரம் வழியாக சென்னை இயக்கப்பட்டு வந்த பேருந்தை மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: