தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு

கள்ளக்குறிச்சி, நவ. 21: கள்ளக்குறிச்சி தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் சேலம் மெயின் ரோடு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் 200க்கும் மேற்பட்ட காய்கறி கடை, பழக்கடை, மளிகை கடை உள்ளிட்ட கடைகள் உள்ளது. சுமார் 40 ஆண்டுகளாக இந்த மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. குறைந்த பட்சம் ரூ. 2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை நகராட்சியில் டெபாசிட் கட்டி ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை மாதந்தோறும் வாடகை செலுத்தி இந்த கடைகளை வியாபாரிகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதமாக காய்கறி மார்க்கெட் அருகில் சாலையோரத்தில் 50க்கும் மேற்பட்ட மினி டெம்போ வாகனத்தை வைத்து வியாபாரம் செய்கின்றனர். அவர்களுக்கு கடை வாடகை உள்ளிட்ட செலவுகள் இல்லாததால் விலையை குறைத்து விற்கின்றனர். இதனால் ெபாதுமக்கள் அவர்களிடம் காய்கறிகளை வாங்கி சென்றனர். இதனால் மார்க்கெட் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி நகராட்சி மற்றும் காவல்துறையில் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் புகார் அளித்தனர். இந்நிலையில் நேற்று தினசரி மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளையும் மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மார்க்கெட் நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இப்பிரச்னை தொடர்பாக நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் நடந்த சமாதான கூட்டத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு சற்று தூரத்தில் வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அந்த இடத்துக்கு செல்ல மறுத்தனர். இதையடுத்து கூட்டத்தை புறக்கணித்த தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் திட்டமிட்டபடி நேற்று கடையடைப்பு போராட்டம்  நடத்தினர். இதைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் சாலையில் வாகனங்களை நிறுத்தி காய்கறி வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: