லால்குடி அருகே கோயில் குடமுழுக்கு விழா நடத்துவதில் பிரச்னை அதிகாரியிடம் 7 கிராம மக்கள் மனு

திருச்சி, நவ.21: லால்குடி அருகே கோயில் குடமுழுக்கு விழா நடத்துவதில் பிரச்சனை தொடர்பாக அதிகாரியிடம் 7 கிராம மக்கள் மனு அளித்தனர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குருக்கை, வரகுபாடி, மண்ணச்சநல்லூர் அருகே இனாம்கல்பாளையம், மேலக்கல்பாளையம், ஆய்குடிமேல வங்காரம், தேவிமங்கலம், திருச்சி எடமலைப்பட்டிபுதூர் உள்ளிட்ட 7 கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் திருவானைக்காவலில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கல்யாணியிடம் அளித்த மனு: லால்குடி வட்டம் பெரிய குருக்கை கிராமத்தில் பிடாரி நல்லசெல்வி அம்மன், அய்யனார் கோயில்கள் உள்ளன. இந்த கோயிலை ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த கோயிலில் வரகுபாடி, மண்ணச்சநல்லூர் அருகே இனாம்கல்பாளையம், மேலக்கல்பாளையம், ஆய்குடிமேல வங் காரம், தேவிமங்கலம், திருச்சி எடமலைப்பட்டிபுதூர் மற்றும் கிராமங்களை  சேர்ந்த சில சமூகத்தினர் குல தெய்வங்களாக வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் இனாம் கல்பாளையத்தை சேர்ந்த வேறு ஒரு பிரிவினர் வழிபாடு செய்யும் உரிமை கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகத்தில் தலையிட எந்த உரிமையும் இல்லை. இந்த கோயிலை ஆதியில் தோற்றுவித்து விழாக்கள், மாதந்தோறும் வழிபாடுகளை நடத்தி வருகிறோம். எனவே கோயிலின் நிர்வாக நலன், வளர்ச்சி கருதி நிர்வாக திட்டம் ஏற்படுத்துவதற்கு உத்தரவு வழங்கவும், கோயில்களின் திருப்பணி வேலைகளை துவங்கி குடமுழுக்கு விழா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

Related Stories: