விவர அட்டை, இருப்பு பராமரித்தல் குளறுபடி 19,890 கிலோ நெல்விதைகள் விற்பனை செய்ய தடை

திருச்சி, நவ.21: விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் குழு திடீர் ஆய்வு செய்து விவர அட்டை மற்றும் இருப்பு பராமரித்தல் சரியாக இல்லாத காரணத்தால் 19890 கிலோ நெல் விதைகள் விற்பனை செய்ய அதிகாரிகள் தடை விதித்தனர். திருச்சியில் உள்ள விதை விற்பனை நிலையங்கள் மற்றும் விதை சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றில் திடீர் ஆய்வு நடந்தது. இதில் விருதுநகர் விதை ஆய்வுதுணை இயக்குனர் நாச்சியார் தலைமையின்கீழ் விதை ஆய்வாளர்கள் ரவிசங்கர், சந்திரசேகரன், மோகன்தாஸ், பிரகாஷ், விதை ஆய்வு துணை இயக்குநர் கண்ணன்  ஆகியோர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டனர். இதில் விதைச்சட்டம் 1966ன்படி விதிகளை மீறியவிதைக் குவியல்கள் விற்பனை செய்ய தற்காலிக தடைவிதிக்கப்பட்டது. ஆய்வின்போது வெளிமாநில சான்று பெற்ற விதைகளுக்கு படிவம் இரண்டு உள்ளதா எனவும், சான்று பெற்ற விதைகள் உள்ள பைகளில் ஈயவில்லை பொருத்தப்பட்டுள்ளதா என்பதை சரிபார்ப்பதுடன், விவசாயிகளுக்கு வழங்கப்படும் விலைப்பட்டியலில் விதையின் ரகம், நிலை, குவியல் எண், காலாவதி தேதியுடன் பட்டியலிடப்பட்டு கொள்முதல் செய்யும் விவசாயியிடம் கையொப்பம் பெறப்பட வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.

விதை இருப்பு பலகையில் விதை இருப்பு, விலை ஆகிய விவரங்கள் முழுமையாக தெரிவிக்கப்பட வேண்டும். விதை இருப்பு பதிவேட்டில் குவியல் எண், காலாவதி தேதி, கொள்ளளவு, உற்பத்தியாளர் பெயர் மற்றும் பட்டியல் எண்ணுடன் முறையாக பதிவு செய்து பராமரிக்கப்படுகிறதா என்பதையும், விதைகள் உரிய முறையில் சேமிக்கப்படுகின்றனவா என்பதும் கண்காணிக்கப்பட்டது. ஆய்வின்போது 13 விதை மாதிரிகள் எடுத்து விதை பகுப்பாய்விற்காக விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் விவர அட்டை மற்றும் இருப்பு பராமரித்தல் சரியாக இல்லாத காரணத்தால் 19,890 கிலோ நெல் விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது இதன் மதிப்பு ரூ.5.13 லட்சம் ஆகும். விதைச்சட்ட விதிகளை மீறும் விற்பனையாளர்களின் விதை விற்பனை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது. மேலும் தரமான விதைகள் விவசாயிகளுக்கு கிடைக்கும் பொருட்டு இதுபோன்ற குழு ஆய்வு அவ்வப்போது மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Related Stories: