நகையை பறிக்க முயற்சி இருளில் துணிச்சலுடன் போராடி திருடனை விரட்டியடித்த பெண்

திருச்சி, நவ.21: திருச்சி பாலக்கரையில் இருளில் நடந்து சென்ற பெண்ணிடம் நகைபறிக்க முயன்ற திருடனிடம் கடுமையாக மல்லுக்கட்டி விரட்டியடித்து10 பவுன்நகையை காப்பாற்றிக்கொண்டார். திருச்சி பாலக்கரை வடக்கு கல்லுக்காரத் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி மகேஸ்வரி(35). நேற்றுமுன்தினம் மாலை பாலக்கரை பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. தொடர்ந்து மின்சாரம் வராததால் இரவு 8 மணியளவில் மகேஸ்வரி அவ்வழியாக நடந்து சென்றார். அப்போது, பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் பைக்கை திடீரென நிறுத்தினர். பின்னர் ஒரு நபர் மட்டும் கீழே இறங்கி வந்து மகேஸ்வரி கழுத்தில் கிடந்த 10 பவுன் நகையை பறிக்க முயன்றார். இதனால் சுதாரித்த மகேஸ்வரி நகையை கையில் இறுகப் பிடித்துக் கொண்டதால் பாதி நகை திருடன் பிடியிலும், மீதி நகை மகேஸ்வரி பிடியிலும் இருந்தது. இவ்வாறு 10 நிமிடம் நகையை பறிப்பதில் திருடனுக்கும், நகையை பறிக்க விடாமல் பெண்ணுக்கும் கடும் மல்லுக்கட்டு நடந்தது. கும்மிருட்டு ஒரு பக்கம், ஆள் நடமாட்டம் இல்லாதது மறுபக்கம்.

அப்போது மகேஸ்வரி திருடன், திருடன் என சத்தம் போட்டார். ஆனால் யாரும் உதவிக்கு வரவில்லை. அப்போது மகேஸ்வரி, பாதி நகையை பிடித்துக் கொண்டு ஆசாமியின் கையை கடித்துக்கொண்டு விடவில்லை. எவ்வளவோ மல்லுக் கட்டியும் ஆசாமியால் தப்ப முடியவில்லை.  வலி அதிகமானதால் மர்மநபர் நகையைப் போட்டுவிட்டு தப்பித்தால் போதுமென தயாராக நின்றிருந்த மற்றொரு ஆசாமியுடன் பைக்கில் ஏறி  சென்று விட்டார். அதன்பின்னர் அவ்வழியாக வந்தவர்கள் மகேஸ்வரியிடம் விசாரிக்கமுயன்றபோது அவர் மயக்கமானார். முகத்தில் நீர் தெளித்து மயக்கத்தைத் தெளிவித்தனர். பின்னர் மகேஸ்வரி நடந்ததைக் கூறினார். தனி ஆளாக கொள்ளையனிடம் போராடியது மட்டுமல்லாமல், நகையையும் பறிபோக விடாமல் பார்த்துக் கொண்ட மகேஸ்வரியின் வீரச்செயலை அனைவரும் பாராட்டினர். 10 பவுன் தப்பியது

Related Stories: