×

திருவாரூர் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு மாலை வரை உணவு வழங்காததால் அவதி

திருவாரூர், நவ. 21:  திருவாரூர் முகாம்களில் தங்கியிருந்து வரும் பொதுமக்களுக்கு மாலை வரையில் உணவு வழங்கப்படாததால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கஜா புயலையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 205 முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் ஒரு லட்சத்து 12 ஆயிரம்  பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு 3 வேளையும் உணவு மற்றும் மருத்துவம் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒருவேளை உணவுக்கு கூட அவர்கள் மிகவும் துன்பப்படும் நிலை இருந்து வருகிறது. அதன்படி திருவாரூர் அருகே திருநெய்பேர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 500க்கும் மேற்பட்டவர்கள் தங்கியிருந்து வரும் நிலையில் மதியம் ஒருவேளை மட்டுமே உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அதற்கான அரிசி மற்றும் மளிகை பொருட்களையும் சரிவர வழங்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் அப்பகுதியை சேர்ந்த ஜெயசீலன் மற்றும் தாமோதரன் ஆகியோர் கூறுகையில், புயல் தாக்கிய மறுநாள் மதியம் வரையில் எந்த அலுவலர்களும் எங்களை வந்து பார்க்காததன் காரணமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம்.  அதன்பின்னர் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வந்து பார்வையிட்டு அன்று மதிய உணவுக்கு ஏற்பாடு செய்தனர். ஆனால் அதன் பின்னர் இன்று வரையில் மதியம் ஒரு வேளை உணவு மட்டுமே வழங்கப்பட்டாலும் அதற்குரிய அரிசி மற்றும் மளிகை பொருட்களை இப்பகுதி விஏஒ சரிவர வழங்காததால் நாங்கள் தினந்தோறும்  திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இங்கே சமையல் செய்யும் இடமானது  மழை பெய்தால் மழை நீர் உள்ளே சொட்டும் நிலை இருந்து வருகிறது. எனவே அதற்குரிய பாதுகாப்பான இடத்தினை  வழங்க வேண்டும் என்பதுடன் சமையலுக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களையும் தட்டுபாடில்லாமல் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளனர். 

Tags : camps ,Tiruvarur ,
× RELATED கடும் வறட்சி எதிரொலி: டாப்சிலிப்...