×

கஜாபுயலால் பாதிக்கப்பட்டவர்களை அரசு அலுவலர்கள் ,ஆட்சியாளர்கள் சந்தித்து நிவாரணம் வழங்கவில்லை பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருவாருர், நவ. 21:  திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால்  பாதிக்கப்பட்ட பொதுமக்களை அரசு அலுவலர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் நேரில் சந்தித்து எவ்வித நிவாரணமும் வழங்கவில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். கடந்த 15ம் தேதி நள்ளிரவில் கரையை கடந்த கஜா  புயல் காரணமாக திருவாரூர், நாகை, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 5 நாட்களாகியும் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்களோ, ஆட்சியாளர்களோ அதிகாரிகளோ யாரும் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக சாலை மறியல் போன்ற போராட்டங்கள் நடைபெறுவது மட்டுமன்றி அமைச்சர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் சம்பவமும் இருந்து வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இதே போன்ற நிலை இருந்து வரும் நிலையில் இதுகுறித்து திருவாரூர் அருகே மாங்குடி கிராமத்தில் வசித்து வரும் மணி (90) என்பவர் கூறுகையில், புயல் அடித்து 5 நாட்களாகியும் எங்களுக்கு இதுவரையில் குடிநீர் கூட கிடைக்கவில்லை. இரவு நேரங்களில் விளக்கு எரிப்பதற்கு கூட மண்ணெண்ணெய் இல்லை. உணவும் சரிவர கிடைக்கவில்லை. இதுமட்டுமன்றி எங்களை யாரும் இதுவரையில் சந்தித்து ஆறுதல் கூட கூறவில்லை. நிவாரண உதவிகளை வழங்குவதில் ஆளுங்கட்சியினர் பாரபட்சம் காட்டுகின்றனர். எனவே விரைவில் குடிநீர் மற்றும் மின் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் தெரிவித்தனர்.

 இதேபோல் தென்னவராயநல்லூர் கிராமத்தில் வசித்து வரும் தமிழரசி (40) கூறுகையில்:  பாதிக்கப்பட்ட எங்களை இதுவரையில் யாரும் சந்தித்து ஆறுதல் கூட கூறவில்லை. ஏதோ பெயரளவில் மதியம் ஒருவேளை மட்டும் உணவு வழங்குகின்றனர். மற்ற 2  வேளை உணவிற்கும் எங்களுக்கு மிகப் பெரிய பாதிப்பாக இருந்து வருகிறது. குழந்தைகளுக்கு பால் மட்டுமின்றி குடிப்பதற்கு கூட குடிநீர் இல்லை. இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாததால் பாம்பு போன்ற விஷ பூச்சிகள் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகிறோம். எனவே எங்களுக்கு விரைவில் குடிநீர் மற்றும் மின் வசதியினை ஏற்படுத்தி தர வேண்டும் என்று தெரிவித்தார். மேலும்  இதே போன்ற நிலை தான் மாவட்டம் முழுவதும் இருந்து வரும் நிலையில்   குடிநீர்  மற்றும் மின்சாரம் கேட்டு சாலை மறியல் உட்பட பல்வேறு போராட்டங்களில் பொது மக்கள் ஈடுபட்டு வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

Tags : Rulers ,victims ,Kajabullah ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் மயங்கி விழுந்து 2 பேர் பலி: சேலத்தில் சோகம்