×

வாலாங்குளம் கரையில் ஆகாயத்தாமரை கழிவு குவிப்பு

கோவை, நவ.21: கோவை வாலாங்குளத்தில் அகற்றப்பட்ட ஆகாயத்தாமரை கழிவுகள், குளக்கரையில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுகள் மீண்டும் குளத்தில் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள வாலாங்குளம் உக்கடம் - சுங்கம் பைபாஸ் சாைலயில் உள்ளது. உக்கடம் பெரியகுளத்தில் இருந்து வாய்க்கால் மூலம் வரும் தண்ணீர் வாலாங்குளத்தில் வந்து கலக்கிறது. வாலாங்குளம் தற்போது மூன்று துண்டுகளாக காணப்படுகிறது.

வாலாங்குளத்தின் இரண்டு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் ஆகாயத்தாமரைகள் அதிகளவில் படர்ந்து காணப்படுகிறது. முன்னரே, வாலாங்குளத்தில் கலக்கும் கழிவுநீர்களால் குளத்தின் நீர்நிலை கடுமையாக மாசுபட்டு வந்தது. இந்நிலையில் ஆகாயத்தாமரைகளால் வாலாங்குளத்தின் நீர்நிலை மேலும் மாசடைந்தது. ஒரு கட்டத்தில் குளத்தின் நீரே மூடும் அளவுக்கு ஆகாயத்தாமரைகள் பரவிக்காணப்பட்டது.  ஒவ்வொரு முறையும் வாலாங்குளம் உள்ளிட்ட குளங்களில் ஆகாயத்தாமரைகள் படரும் போது, அவற்றை அகற்ற மாநகராட்சியினர் பல லட்சம் நிதியை செலவு செய்து பணி மேற்கொள்கின்றனர். ஆனால், ஆகாயத்தாமரைகளை முற்றிலும் அகற்றாமல் அரைகுறையாக பணிகளை முடித்துவிடுகின்றனர்.

இந்நிலையில், சமூக ஆர்வலர்களின் தொடர் வற்புறுத்தலுக்கு பிறகு, வாலாங்குளத்தில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியை மாநகராட்சி நிர்வாகத்தினர் கடந்த சில வாரங்களாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணி முழு அளவில் மேற்கொள்ளப்படாமல், மந்தகதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், குளத்தில் இருந்து தற்போது அகற்றப்பட்ட ஆகாயத்தாமரைகள் முறையாக குப்பை லாரிகளில் எடுத்து செல்லப்பட்டு வெள்்ளலூர் குப்பைக்கிடங்கில் கொண்டு சென்று கொட்டப்படுவதில்லை. மாறாக, வாலாங்குளத்தில் அகற்றப்பட்ட ஆகாயத்தாமரைகள் குளத்தின் கரைப்பகுதியிலேயே மலைேபால் கொட்டப்பட்டு வருகிறது.  இவ்வாறு கடந்த சில நாட்களாக குளத்தில் இருந்து ஜேசிபி இயந்திரத்தை பயன்படுத்தி எடுக்கப்பட்ட ஆகாயத்தாமரை மீண்டும் குளத்தின் கரையிலேயே கொட்டி வைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கொட்டப்பட்ட ஆகாயத்தாமரை கழிவுகளில் பெரும்பாலானவை தற்போது காய்ந்து காணப்படுகிறது.

இவை காற்றின் வேகத்திற்கு மீண்டும் குளத்திலேயே விழுகிறது. அதேபோல், சாலையில் விழுந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. குளத்தின் கரையில் போடப்பட்டுள்ள ஆகாயத்தாமரை மீண்டும் குளத்திற்குள் விழுவதால், நீர்நிலை மாசுபடுகிறது. இதை அகற்ற செலவழிக்கப்பட்ட நிதி வீணாவது மட்டுமல்லாமல், மீண்டும் விதைகள் மூலம் ஆகாயத்தாமரைகள் குளத்தில் படர்ந்து நீர்நிலை மாசடைய வாய்ப்பாக அமைகிறது. குளத்தில் அகற்றப்பட்ட ஆகாயத்தாமரைகளை முறையாக வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் கொண்டு சென்று கொட்டாமல், குளத்தின் கரை மீது கொட்டி நீர்நிலை மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட அந்த பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மீது  மாநகராட்சி நிர்வாகத்தினர் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

Tags : bank ,
× RELATED தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து...