×

சொத்துவரியை உயர்த்த சுய மதிப்பீட்டு அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தல்

கோவை, நவ.21: சொத்துவரியை உயர்த்த சுய மதிப்பீட்டு விபர அறிக்கையை வரும் 24ம் தேதிக்குள் தாக்கல் செய்ய மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
 கோவை மாநகராட்சியில் 4.98 லட்சம் சொத்துவரி விதிப்பு இனங்கள் உள்ளது. இதில் குடியிருப்புகள், குடியிருப்புகள் அல்லாத வணிகவகை வரிவிதிப்பு இனங்கள் போன்றவை அடங்கும். மாநகராட்சியின் சார்பில் ஒரு நிதியாண்டு இரண்டு அரை நிதியாண்டுகளாக பிரிக்கப்பட்டு சொத்துவரி வசூலிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு மாநகராட்சி சார்பில் நிலுவைத்தொகை சேர்த்தி ரூ.182.47 கோடி சொத்துவரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 மாநகராட்சியின் சார்பில் பரப்பளவுக்கு ஏற்ப குடியிருப்புகளுக்கு, குடியிருப்புகள் அல்லாத அனைத்து வகை வணிகவளாக கட்டடங்களுக்கு சொத்துவரியும் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. தமிழகஅரசால் குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதமும், வாடகை குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதமும், குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு 100 சதவீதமும் சொத்துவரி உயர்த்தப்படும் என கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

 தற்போது அதற்கான நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர். சொத்துவரியை 1.4.2018ம் முதல் மாற்றியமைக்க மாநகராட்சி நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர். இந்த சொத்துவரி சொத்து உரிமையாளர் அல்லது குடியிருப்போர் அல்லது குத்தகைதாரர்கள் சமர்ப்பிக்கும் சொத்துவரி சுய மதிப்பீட்டு விபர அறிக்கையில் உள்ள விபரங்களை அடிப்படையாக கொண்டு இருக்கும்.  இதற்கான அரசாணையின் படி சொத்துவரி சீராய்வை மாநகராட்சி நிர்வாகத்தினர் தொடங்க உள்ளனர். எனவே, மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்துகளின் உரிமையாளர்கள், குடியிருப்போர், குத்தகைதாரர்கள் சொத்துவரி சுய மதிப்பீட்டு விபர அறிக்கையினை கடந்த மாதம் 24ம் தேதி முதல் வரும்  24ம் தேதிக்குள் தாக்கல் செய்ய மாநகராட்சியால் உத்தரவிடப்பட்டு இருந்தது.

 குறிப்பிட்ட தேதிக்குள் சொத்துவரி சுய மதிப்பீட்டு விபர அறிக்கையினை தாக்கல் செய்யாத மதிப்பீட்டாளர்களின் சொத்துகள் ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு உத்தரவளிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் சொத்துவரி வசூலிக்கவும் மாநகராட்சியால் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், சொத்துவரி சுய மதிப்பீட்டு விபர அறிக்கையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விபரங்களின் ஏதேனும் வேறுபாடுகள் காணப்பட்டால், சொத்து உரிமையாளர்களின் கட்டட பரப்பளவு, கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட ஆண்டு, உபயோகம் போன்றவை குறித்த ஆட்சேபனைகள் பெறப்பட்டு, அதனடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்ட காலத்தில் இருந்து மறுமதிப்பீடு செய்யப்பட்டு சொத்துவரி கேட்பு முடிவு செய்யப்படும் எனவும் மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டுள்ளது.

 இதுகுறித்து மாநகராட்சி வருவாய் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,‘‘ சொத்துவரி சுய மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்கான விண்ணப்பங்கள் மாநகராட்சி பிரதான அலுவலகம், மண்டல அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். படிவத்தை மாநகராட்சி இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து ெகாள்ளலாம். இந்த சொத்துவரி சுயமதிப்பீட்டு விபர அறிக்கையை மாநகராட்சி ஆணையாளர், கோவை மாநகராட்சி என்ற முகவரிக்கு நேரிடையாகவோ, தபால் மூலமாகவோ, இணையவழி மூலமாகவோ வரும் 24ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதுவரை ஏராளமானோர் சமர்ப்பித்துள்ளனர்.,’’ என்றனர்.

Tags :
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ₹14.20 லட்சம் கடத்திய கில்லாடி