விவசாய விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரங்கள் அமைக்க கூடாது

ஈரோடு, நவ. 21:  விவசாய விளை நிலங்களில் உயர் மின்கோபுரங்கள் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இழப்புகள் தொடர்பான முத்தரப்பு கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட எஸ்.பி.சக்திகணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக பேசியதாவது: விவசாய விளை நிலங்களில் மின்கோபுரங்கள் அமைப்பதை தவிர்த்து மற்ற நகரங்களை போல புதைவழி கேபிள் மூலமாக மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். கோபுரம் அமைத்தால், இயற்கை பேரிடர் காலங்களில் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்படும். எந்த ஒரு பகுதியிலும் ஆட்சியரின் அனுமதி இல்லாமல், எந்த ஆய்வும் மேற்கொள்ளக் கூடாது. இந்த திட்டம் கரூர் மாவட்டம் புகழூர் வழியாக செல்லும் திட்டமாகும். அங்கு எதிர்ப்பு மற்றும் அரசியல் காரணங்களுக்காக இந்த திட்டத்தை ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பிரச்சனை தொடர்பாக மின்துறை அமைச்சரிடம் முறையிட்டுள்ளோம். உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. மத்திய, மாநில அரசியல் கட்சி தலைவர்களும் இந்த திட்டத்தை மாற்றுவழியில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய சங்க நிர்வாகிகளிடம் வலியுறுதி உள்ளனர்.  இதில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஈசன், சிறு, குறு விவசாயிகள் சங்க தலைவர் சுதந்திரராசு, பவர் கிரீட் நிறுவன உயர் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், வேளாண்துறை அதிகாரிகள் உட்பட விவசாய சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: