×

அரசு ஊழியர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்

நாமக்கல்,  நவ.21: நாமக்கல்லில், வரும் 22 மற்றும் 23ம் தேதிகளில் அரசு ஊழியர்களுக்கு  மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இதுகுறித்து  நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்ட அரசு அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டிகள் வரும் 22  மற்றும் 23ம் தேதி ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது. 100மீ, 200மீ, 800மீ மற்றும் 1,500மீ ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தொடர்  ஓட்டம் ஆகிய போட்டிகள் நடத்தப்படுகிறது. பெண்களுக்கான தடகளப் போட்டியில் 100மீ, 200மீ, 400மீ, 800மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல்,  குண்டெறிதல், தொடர் ஓட்டம் நடத்தப்படுகின்றன. தடகளப் போட்டிகள் 22ம் தேதி(நாளை) காலை 8.30 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. ஆண், பெண்களுக்கான கபாடி, வாலிபால் போட்டிகள் மற்றும் ஆண்களுக்கான கால்பந்து போட்டியும் நடத்தப்படுகிறது.

மேலும், அரசு  தெற்கு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருபாலருக்கும் கூடைப்பந்து  போட்டி, ஆபீசர்ஸ் கிளப்பில் இருபாலருக்கும் டென்னிஸ், இறகுப்பந்து  போட்டியும், விக்டோரியா ஹாலில் இருபாலருக்கும் டேபிள் டென்னிஸ் போட்டியும்  நடைபெறுகிறது. மாவட்ட அளவிலான போட்டியில் தேர்வாகும் வீரர், வீராங்கனைகள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பர். மாநில அரசின் அனைத்து துறையிலும் பணிபுரியும் அலுவலர்கள், காவல்  துறையில் அமைச்சு பணியாளர்கள், அரசு பள்ளிகளின்  உடற்கல்வி ஆசிரியர்கள் போட்டிகளில் பங்கேற்கலாம்.

நிதிஉதவி பெறும் பள்ளிகளின்  உடற்கல்வி ஆசிரியர்கள், சீருடை பணியாளர்கள், தற்காலிக,  தினக்கூலி பணியாளர்கள், 6 மாதத்துக்குள் அரசு பணியில் சேர்ந்த பணியாளர்கள்,  தொழில்முறை விளையாட்டு வீரர்கள் அல்லது ஒப்பந்தப் பணியாளர்கள் பங்கேற்க அனுமதியில்லை. அரசு பணியாளர்கள் தங்களின் அடையாள  அட்டையை கண்டிப்பாக கொண்டுவர வேண்டும்.  இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : District level sports competitions ,government employees ,
× RELATED ஓய்வு அரசு ஊழியர் சங்க கூட்டம்